கோலி, புஜாரா சொதப்பல்.. முதல் டெஸ்ட்டில் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. நங்கூரம் போட்ட ரஹானே

By karthikeyan VFirst Published Feb 21, 2020, 10:25 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி, புஜாரா, ஹனுமா விஹாரி, பிரித்வி ஷா என யாருமே சோபிக்காததால் மளமளவென சொற்ப ரன்களுக்கே விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணி:

Latest Videos

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா. 

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டாம் பிளண்டெல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், பிஜே வாட்லிங்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட் ஹோம், அஜாஸ் படேல்,  டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், கைல் ஜாமிசன். 

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் களமிறங்கினர். பிரித்வி ஷா 18 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா, வெறும் 11 ரன்னில் வெளியேறினார். 

இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் விராட் கோலி வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஒருநாள் போட்டிகளிலும் சரியாக ஆடாத கோலியின் சோகம் தொடர்கிறது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். 

40 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், மயன்க் அகர்வாலுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அனுபவ வீரரும் துணை கேப்டனுமான ரஹானே, நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் மயன்க் 34 ரன்களில் வெளியேற, அதன்பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி 7 ரன்னில் நடையை கட்டினார். 

ஒருமுனையில் மயன்க், ஹனுமா விஹாரி என விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ரஹானே களத்தில் நங்கூரம் போட்டு நின்றுவிட்டார். விஹாரியின் விக்கெட்டுக்கு பிறகு, ரஹானேவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட்டுக்கு தனிப்பட்ட முறையிலும் இந்த இன்னிங்ஸ் மிக முக்கியமானது. அணிக்கும் அவரது சேவை இந்த நேரத்தில் தேவை. ரஹானே 122 பந்தில் 38 ரன்களும் ரிஷப் 10 ரன்களும் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது செசனில் மழை குறுக்கிட்டது. 

இந்திய அணி 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டம் மழையால் தடைபட்டது. அதன்பின்னர் மழை தொடர்ந்துகொண்டே இருந்தது. மழை நின்ற பின்னர் மைதானம் ஈரமாக இருந்ததால் கொஞ்ச நேரம் தாமதமானது. இப்படியாக தாமதமாகி கொண்டே இருந்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. 
 

click me!