அஷ்வின் vs ஜடேஜா.. ரிஷப் பண்ட் vs சஹா.. நீயா நானா போட்டியில் வென்றது யார்? முதல் டெஸ்ட்டில் இறங்கிய இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 21, 2020, 9:50 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்பின்னர் மற்றும் விக்கெட் கீப்பராக யார் எடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், அஷ்வின் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்திருந்தது. 

பேட்டிங் ஆர்டர், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகிய இரண்டும் உறுதியாகியிருந்த நிலையில் ஸ்பின்னர் மற்றும் விக்கெட் கீப்பராக யார் இறங்குவார்கள் என்ற கேள்வி மட்டும் இருந்தது. அஷ்வின் - ஜடேஜா ஆகிய இருவரில் யார் ஸ்பின் பவுலராக இறங்குவார் என்ற சந்தேகம் இருந்தது. 

அஷ்வின் - ஜடேஜா இருவருமே சிறந்த ஸ்பின்னர்கள். ஆனால் ஜடேஜா, பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் கூடுதல் பங்களிப்பு அளிக்கக்கூடியவர். அதேநேரத்தில் ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில், ஜடேஜாவை விட அஷ்வின் தான் சிறந்த, அனுபவம் வாய்ந்த மற்றும் இந்திய அணியின் முதன்மை டெஸ்ட் ஸ்பின்னர். ஆனால் அஷ்வினுக்கு இந்தியாவில் ஆடும்போது தான் அதிகமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுவந்தது. எனவே இருவரில் யார் இந்த போட்டியில் ஆடுவார் என்ற சந்தேகம் இருந்த நிலையில், அஷ்வின் தான் இந்த போட்டியில் ஆடுகிறார். ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

அதேபோல விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா இறங்குவாரா அல்லது ரிஷப் பண்ட் இறங்குவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சஹா சேர்க்கப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கை விக்கெட் கீப்பிங் செய்ய அனுபவமான விக்கெட் கீப்பர் தேவையென்ற வகையில் சஹா எடுக்கப்பட்டதாக அப்போதே விளக்கமளிக்கப்பட்டது. எனவே வெளிநாடுகளில் ஆடும்போது பேட்டிங்கிற்கு முன்னுரிமை அளிக்கும்வகையில் தான் விக்கெட் கீப்பிங் தேர்வு இருக்கும் என்பதை கணிக்க முடிந்தது. அந்தவகையில், சஹாவை விட ரிஷப் பண்ட் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், அவரே இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணி:

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா. 

வெலிங்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, 101 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரஹானேவும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். 
 

click me!