ரோஹித்தை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகிய மற்றொரு வீரர்.. மாற்று வீரர் அறிவிப்பு.. 2 ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியில் இணைந்த வீரர்

By karthikeyan VFirst Published Feb 4, 2020, 11:12 AM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. நியூசிலாந்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில், 3வது டி20 போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் கடைசி 2 போட்டிகளில் ஆடாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் சீனியர் வீரரும் அதிரடி தொடக்க வீரருமான ரோஹித் சர்மா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் விலகியுள்ளார். வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் பயப்படும்படியாக எதுவுமில்லை என்று தெரிந்தது. ஆனாலும் டெஸ்ட் தொடரில் அவர் ஆட வேண்டியது அவசியம் என்பதால், அவருக்கு ஓய்வு கொடுத்து நல்ல உடற்தகுதியை பெற ஏதுவாக, 2 ஒருநாள் போட்டிகளில் ஆடமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே கேப்டன் வில்லியம்சனுக்கு மாற்றாக மார்க் சாப்மேன் அணியில் இணைந்துள்ளார். மார்க் சாப்மேன் கடைசியாக 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவில்லை. டி20 போட்டியிலும் சுமார் ஒன்றரை ஆண்டாக ஆடவில்லை. இந்நிலையில், இந்தியா ஏ அணிக்கு எதிராக நியூசிலாந்து ஏ அணியில் ஆடிய மார்க் சாப்மேன், தொடர்ச்சியாக 2 சதங்களை அடித்து அசத்தினார். எனவே அவருக்கு நியூசிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Also Read - டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ப்ரித்வி ஷா கம்பேக்.. இளம் ஃபாஸ்ட் பவுலருக்கு அறிமுக வாய்ப்பு.. கண்டிஷனுடன் எடுக்கப்பட்ட சீனியர் வீரர்

வில்லியம்சன் முதல் 2 போட்டிகளில் ஆடாததால் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லேதம் தற்காலிக கேப்டனாக செயல்படுவார். 

நியூசிலாந்து ஒருநாள் அணி:

டாம் லேதம்(கேப்டன் - விக்கெட் கீப்பர்), மார்டின் கப்டில், ஹென்ரி நிகோல்ஸ், ரோஸ் டெய்லர், மார்க் சாப்மேன், டாம் பிளண்டெல், காலின் டி கிராண்ட் ஹோம், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, குஜ்ஜெலின், பென்னெட், கைல் ஜேமிசன். 
 

click me!