பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 449 ரன்களை குவித்துள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி:
டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, அஜாஸ் படேல்.
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், ஹசன் அலி, நசீம் ஷா, மிர் ஹம்ஸா, அப்ரார் அகமது.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 134 ரன்களை குவித்தனர். 71 ரன்களில் டாம் லேதம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெவான் கான்வே சதமடித்தார். டெவான் கான்வே 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 36 ரன்களும், ஹென்ரி நிகோல்ஸ் 26 ரன்களும் அடித்தனர். டேரைல் மிட்செல்(3) மற்றும் பிரேஸ்வெல் (0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் டாம் பிளண்டெலும் இஷ் சோதி சேர்ந்து ஆடிவர, முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் அடித்திருந்தது. நியூசிலாந்து அணி. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2ம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே 11 ரன்களுக்கு இஷ் சோதி ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த டாம் பிளண்டெல் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டிம் சௌதி 10 ரன்கள் அடித்தார். 345 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி.
10வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேட் ஹென்ரி மற்றும் அஜாஸ் படேல் ஆகிய இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பாகிஸ்தான் பவுலிங்கை அடித்து ஆடி ஸ்கோரும் செய்தனர். கடைசி விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு 24 ஓவர்கள் தேவைப்பட்டது. 24 ஓவர்கள் கடைசி விக்கெட்டுக்கு தாக்குப்பிடித்து ஆடிய ஹென்ரியும் அஜாஸ் படேலும் இணைந்து 104 ரன்களை குவித்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த மேட் ஹென்ரி 68 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 38 ரன்கள் அடித்த அஜாஸ் படேல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸில் 449 ரன்களை குவித்தது நியூசிலாந்துஅணி. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.