பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 401 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். வில்லியம்சன் மற்றும் ரவீந்திரா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி 2ஆவது விக்கெட்டிற்கு 180 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரவீந்திரா 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 29 ரன்களும், மார்க் சேப்மேன் 39 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக டாம் லாதம் 2 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 26 ரன்களும் எடுக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்துள்ளது.
CWC 2023: டெல்லியில் வீரர்களுக்கு இருமல் பாதிப்பு – பயிற்சியை ரத்து செய்த வங்கதேச அணி!
இதன் மூலமாக உலகக் கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து இணைந்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்கா 3 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.
ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக இங்கிலாந்து 444/3 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது நியூசிலாந்து 2ஆவது அணியாக 401 ரன்கள் குவித்துள்ளது. இதே போன்று உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக நியூசிலாந்து 401 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகமது வாசீம் ஜூனியர் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி, ஹரீஷ் ராஃப் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
நியூசிலாந்து:
டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரெண்ட் போல்ட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபீக், ஃபகர் ஜமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), இப்திகார் அகமது, சவுத் சகீல், அகா சல்மான், ஷகீன் அஃப்ரிடி, ஹசன் அலி, முகமது வாசீம் ஜூனியர், ஹரீஷ் ராஃப்