கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Jun 2, 2021, 9:43 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
 

அயர்லாந்து அணி நெதர்லாந்துக்கு சென்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய  நெதர்லாந்து அணியை 195 ரன்களுக்கு சுருட்டியது அயர்லாந்து அணி. 

நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருந்ததால், நெதர்லாந்து அணியின் ரன் வேகம் அதிகரிக்கவேயில்லை. அந்த அணியின் டெயிலெண்டர் டிம் வாண்டெர் கக்டென் அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார்.

அவரைத்தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 50 ஓவர்கள் முழுமையாக ஆடியும் நெதர்லாந்து அணி வெறும் 195 ரன்கள் மட்டுமே அடித்தது. அயர்லாந்து அணி சார்பில் க்ரைக் யங் மற்றும் ஜோஷுவா லிட்டில் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 196 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி, ஒருமுனையில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய அனுபவ தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் அரைசதம் அடித்தார். 69 ரன்களை குவித்து ஸ்டர்லிங் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை.

ஸ்டர்லிங் அரைசதம் அடித்திருந்தாலும், அதிகமான பந்துகளை வீணடித்தார். 112 பந்தில் அந்த 69 ரன்களை அடித்தார். அதனால் இலக்கு எளிதானதாகவே இருந்தாலும், அதை அயர்லாந்தால் அடிக்க முடியாமல் போனது. பின்வரிசையில் சிமி சிங் நிலைத்து ஆடி வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். கடைசி ஓவரில் அவரும் 45 ரன்னில் ரன் அவுட்டாக, 9 விக்கெட்டுகளை இழந்துவிட்ட அயர்லாந்து அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அயர்லாந்து அணி ஒரு ரன் மட்டுமே அடித்ததால், ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நெதர்லாந்து முன்னிலை வகிக்கிறது.
 

click me!