நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 3ஆவது போட்டி டிராவில் முடிந்த நிலையில் போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இதில், போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜூன் 3 ஆம் தேதியான இன்று நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நமீபியா கேப்டன் ஹெர்கார்டு எராஸ்மஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஓமன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. காலிட் கைல் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். ஜீசான் மக்சூத் 22 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய நமீபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் 0 ரன்னில் வெளியேற, நிக்கோலஸ் டேவின் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் எராஸ்மஸ் 13 ரன்களில் வெளியேறினார். ஜே ஜே ஸ்மித் 8, ஜான் க்ரீன் 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஜான் ஃப்ரைலிங்க் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் கிரீன் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் ஒரு ரன்னும், 5ஆவது பந்தில் 2 ரன்னும் எடுக்கப்படவே, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஒரு ரன் மட்டுமே எடுக்கப்படவே போட்டியானது டிரா செய்யப்பட்டது.
நம்பீயா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது. பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியானது சூப்பர் ஓவரில் 21 ரன்கள் குவித்தது. ஓமன் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.