மெசேஜை மட்டும் சொல்லாம சும்மா சீன் போடுறாப்ள..! இலங்கை பயிற்சியாளரை சாடிய முரளிதரன்

By karthikeyan VFirst Published Jul 21, 2021, 7:06 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான தோல்வி விரக்தியில், களத்திலேயே இலங்கை கேப்டனுடன் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை சாடியுள்ளார் முத்தையா முரளிதரன்.
 

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ஷிகர் தவானின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது.

நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தீபக் சாஹரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் அவருக்கு புவனேஷ்வர் குமார் கொடுத்த ஒத்துழைப்பால் இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில் தீபக் சாஹரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது இலங்கை அணி. தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வியடைந்த விரக்தியில், போட்டிக்கு பின்னர் களத்திற்குள் வந்த இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் ஷனாகாவிடம் ஏதே கூற, அதற்கு ஷனாகா ஆர்தரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசினார். இதையடுத்து ஷனாகாவிடம் கடுங்கோபமாக பேசிவிட்டு களத்தை விட்டு வெளியேறி ஓய்வறைக்கு சென்றார் மிக்கி ஆர்தர். 

இலங்கை அணியின் கேப்டன் ஷனாகா - பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இடையேயான வாக்குவாதம், இலங்கை அணியின் முதிர்ச்சியின்மையை காட்டும் விதமாக அமைந்தது. போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே, தோல்வியை நோக்கி செல்லச்செல்ல, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஓய்வறையில் அணி நிர்வாகத்தினரிடம் பயங்கர கோபமாக கத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் செயல் குறித்து பேசியுள்ள இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், எனக்கு தெரிந்து, இலங்கை பயிற்சியாளர் அவரது அதிருப்தியை, அணிக்கு தேவையான மெசேஜை அமைதியாக சொல்வதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம். அதுதான் சிறந்தது. ஆனால், தான் அதிருப்தியில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் இருந்தது அவரது செயல்.

ஆனால் அதுவொரு வாக்குவாதம் தான். அதில் எந்த தவறும் கண்டுபிடிக்க தேவையில்லை. நல்ல பவுலரை முன்கூட்டியே வீசவைத்து விக்கெட்டை எடுக்க முயல வேண்டும். அதைவிடுத்து கடைசி வரை பாதுகாத்து வைப்பதெல்லாம் வேலைக்கே ஆகாது என்று முரளிதரன் தெரிவித்தார்.
 

click me!