தோல்வி வாடிக்கையாகிவிட்டதால், எப்படி ஜெயிப்பது என்பதையே மறந்துட்டாய்ங்க..! இலங்கை அணியை விளாசிய முரளிதரன்

By karthikeyan VFirst Published Jul 21, 2021, 5:23 PM IST
Highlights

இலங்கை அணி எப்படி ஜெயிப்பது என்பதையே மறந்துவிட்டதாக முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

1996ல் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கரா, ஜெயவர்தனே, சமிந்தா வாஸ், லசித் மலிங்கா ஆகிய உலகத்தரம் வாய்ந்த தலைசிறந்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொடுத்த நாடு. 

ஆனால், சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய வீரர்களின் ஓய்விற்கு பிறகு, கடந்த சில ஆண்டுகளாகவே அந்த அணி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அண்மையில் இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலுமே ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை, சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொண்டு ஆடிவருகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி, இங்கிலாந்தில் இருப்பதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனால், அந்த இந்திய அணியை 2ம் தர அணி என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மிகக்கடுமையாக விமர்சித்தார். அதை இலங்கை கிரிக்கெட் வாரியமும், இலங்கை முன்னாள் ஜாம்பவான்களுமே ஏற்கவில்லை என்றாலும், ரணதுங்காவின் கருத்து மிகக்கடுமையாக பட்டது.

இந்நிலையில் ரணதுங்காவின் கருத்துக்கு பேச்சில் பதிலடி கொடுக்காமல், ஆட்டத்தில் பதிலடி கொடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அதிலும் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, தீபக் சாஹரை வீழ்த்த முடியாமல் தோல்வியடைந்தது இலங்கை அணி.

ஜெயிக்க வேண்டிய போட்டியிலேயே இலங்கை அணி தோல்வியடைந்தது, முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை கடும் அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில், இலங்கை அணி குறித்து பேசியுள்ள முத்தையா முரளிதரன், நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வழிகள் தெரியவில்லை. வெற்றி பெறுவது எப்படி என்பதை கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி மறந்தேவிட்டது. வெற்றி பெறுவது எப்படி என்பதே தெரியாததால், இது இலங்கை அணிக்கு கிரிக்கெட்டில் மோசமான காலக்கட்டம் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 

click me!