#SLvsIND போராடி வென்ற இந்தியா..! டீம் மீட்டிங்கில் ராகுல் டிராவிட் பேசியது என்ன..?

By karthikeyan VFirst Published Jul 21, 2021, 3:39 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர், டீம் மீட்டிங்கில் ராகுல் டிராவிட் பேசிய கருத்துகள், கிரிக்கெட் மட்டுமல்லாது எந்தவொரு அணியையும் வழிநடத்தும் கேப்டன் அல்லது லீடருக்கான பாடம்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், தனது கிரிக்கெட் கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலமாக ஆடிராத வீரர். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனது கெரியர் முழுவதும் ஆடியதால் தான் வரலாற்றில் இடம்பெற்று, அனைவரது நல்லபிப்ராயத்தையும் பெற்றிருக்கிறார் ராகுல் டிராவிட்.

இந்திய அணிக்காக ஆடியபோது அளித்த பங்களிப்பில், சற்றும் குறைவில்லாத பங்களிப்பை ஓய்விற்கு பிறகும் அளித்துவருகிறார். இந்தியா ஏ அணி மற்றும் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்து இளம் வீரர்களை மெருகேற்றி இந்திய அணிக்கு கொடுத்த ராகுல் டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து அணியை வழிநடத்துகிறார்.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 தொடரை வென்றுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை, 8ம் வரிசையில் பேட்டிங் ஆடிய தீபக் சாஹர் பொறுப்புடன் சிறப்பாக பேட்டிங் ஆடி 69 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 276 ரன்கள் என்ற இலக்கை எட்டவைத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடும் இயல்பு கொண்ட ராகுல் டிராவிட்டை போலவே, அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடி வெற்றியை பெற்றது.

ராகுல் டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கைதான் தனது சிறப்பான பேட்டிங்கிற்கான உத்வேகமாக அமைந்ததாக, மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடி ஆட்டநாயகன் விருதை வென்ற தீபக் சாஹர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், போட்டிக்கு பின் நடந்த டீம் மீட்டிங்கில் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நாம் வெற்றி பெற்று நல்ல முடிவை பெற்றுவிட்டோம்; மகிழ்ச்சி. ஆனால் ஒருவேளை நாம் வெற்றி பெறவில்லை என்றாலும், அதில் வருத்தப்பட எதுவுமில்லை. ஏனெனில் கடைசி வரை கடுமையாக போராடினோம். வெற்றி - தோல்விக்கு அப்பாற்பட்டு நாம் எந்தளவிற்கு ஃபைட் கொடுத்தோம் என்பதே முக்கியம். அனைவரும் அசத்தலாக ஆடினீர்கள்.

தனிப்பட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டங்களை பற்றி பேசுவதற்கு இது சரியான நேரம் கிடையாது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பற்றி பேசுவதற்கும் அலசுவதற்குமான மீட்டிங் தான் டீம் மீட்டிங். ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டீர்கள். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது. கடைசியில் சிறப்பாக பேட்டிங் ஆடி, வெற்றிகரமாக போட்டியை முடித்துள்ளோம் என்று ராகுல் டிராவிட் பேசினார்.
 

click me!