இரு குழுக்களாக பிரிந்திருக்கும் இந்திய அணி? டி20 கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெறுகிறார் விராட் கோலி?

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 6:27 PM IST
Highlights

இந்திய அணி மும்பை மற்றும் டெல்லி என இரண்டு குழுக்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவார் என்றும் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா - விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவிவருவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒரு பேச்சு உள்ளது. ஆனால் அதையெல்லாம் மழுங்கடிக்கும் விதமாக கோலியும் ரோஹித்தும் இணைந்து களத்தில் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்துதான் வருகின்றனர்.

ஒரு ஐசிசி உலக கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனம் கேப்டன் கோலி மீது இருந்துவந்த நிலையில், டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார் விராட் கோலி. இதையடுத்து இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விரைவில் வெளியேறுவார் என்ற தகவல் வந்தவண்ணம் உள்ளது. அது நடந்தால், ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா பொறுப்பேற்பார்.

ரோஹித் சர்மா கேப்டன்; ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் என இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான அத்தியாயம் முடிந்து புதிய அத்தியாயம் தொடங்குகிறது.

இந்திய அணியின் கேப்டன் மாற்றம் நிகழ்ந்துள்ள இந்த சமயத்தில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமது. 

இதுகுறித்து பேசியுள்ள முஷ்டாக் அகமது, வெற்றிகரமான ஒரு கேப்டன் திடீரென கேப்டன்சியிலிருந்து விலகுகிறார் என்றால் அணியின் ஓய்வறையில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்திய அணி இப்போது 2 குழுக்களாக பிரிந்திருக்கிறதை நான் பார்க்கிறேன். மும்பை மற்றும் டெல்லி என இரண்டு குழுக்களாக பிரிந்திருக்கிறது. எனவே கோலி விரைவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவார் என நினைக்கிறேன். ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடுவார் என்று முஷ்டாக் அகமது கருத்து கூறியுள்ளார்.
 

click me!