பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸி., அணிக்கு இதெல்லாம் தலைவலியா இருக்கப்போகுது! லிஸ்ட் போட்ட ஹாக்

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 5:37 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எந்தெந்த விஷயங்கள் எல்லாம் தலைவலியாக அமையப்போகின்றன என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் வரும் 14ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த அணி அல்ல என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

பாகிஸ்தான் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் இப்போது ஃபைனலுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளையே வீழ்த்திவிட்டுத்தான் அரையிறுதிக்கு வந்திருக்கிறது. பாபர் அசாம் செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். முகமது ரிஸ்வான் பாகிஸ்தானுக்கு தேவையான அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார். முகமது ஹஃபீஸ் நல்ல ஃபார்மில் ஓரளவிற்கு பங்களிப்பு செய்துவருகிறார். ஷோயப் மாலிக் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 18 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரும் செம ஃபார்மில் இருக்கிறார். ஆசிஃப் அலி தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்கிறார்.

இப்படியாக பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. பவுலிங்கை பொறுத்தமட்டில், ஃபாஸ்ட் பவுலிங்கில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். ஹசன் அலியின் அனுபவமும் பலம் சேர்க்கும். ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கானும், இமாத் வாசிமும் அசத்திவருகின்றனர். பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் தரமும் பன்மடங்கு மேம்பட்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணி சிறந்து விளங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியும் சளைத்தது அல்ல. பேட்டிங்கில் டேவிட் வார்னர் ஃபார்முக்கு வந்திருப்பது மிகப்பெரிய பலம். மிட்செல் மார்ஷும் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். ஸ்மித் மிடில் ஆர்டருக்கு வலுசேர்க்கிறார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் மிடில் ஆர்டரிலும், டெத் ஓவர்களிலும் அடித்து ஆடவல்லவர்கள். பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் காம்பினேஷன் பட்டைய கிளப்பிவருகிறது. ஸ்பின்னில் ஆடம் ஸாம்பா அருமையாக வீசிவருகிறார்.

எனவே இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், போட்டி கடுமையாக இருக்கும் என்பது உறுதி. இந்த போட்டி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு என்னென்ன விஷயங்கள் எல்லாம் தலைவலியாக அமையப்போகிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களை ஃபின்ச்சும் வார்னரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் பெரிய தலைவலி. ஷாஹீன் அஃப்ரிடி வார்னருக்கு பந்தை ஸ்விங் செய்து வெளியே எடுத்துச்சென்றால், அது அவருக்கு கடும் சவாலாக இருக்கும். வெளியே செல்லும் பந்துக்கு பேட்டை மட்டும் விடக்கூடியவர் வார்னர். அப்படி பேட்டை விட்டால் எட்ஜ் ஆவதற்கோ அல்லது பேட்டிற்கும் கால்காப்பிற்கும் இடையே பந்தைவிட்டு போல்டு ஆவதற்கோ வாய்ப்புள்ளது. வலது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக ஆடுமளவிற்கு வார்னர், இடது கை ஃபாஸ்ட் பவுலர்களை திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார். 

அடுத்த தலைவலி என்னவென்றால், இமாத் வாசிமின் இடது கை ஸ்பின்னை ஆரோன் ஃபின்ச் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான். இந்த 2 விஷயங்களும் தான் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் ஜெயிக்கிறதா அல்லது தோற்கிறதா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாகும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

click me!