IPL 2021 பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியது மும்பை அணி..! பிளே ஆஃபிற்கு முன்னேறியது கேகேஆர்

By karthikeyan VFirst Published Oct 8, 2021, 10:41 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இன்று ஒரே சமயத்தில் 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் போட்டியில், பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட ஆர்சிபியும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவரும் அதேவேளையில், அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன.

சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், 12 புள்ளிகள் மற்றும் +0.587 என்ற நெட்ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது கேகேஆர் அணி.

கேகேஆர் அணியை பின்னுக்குத்தள்ளி பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டுமென்றால், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. 

மாபெரும் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொண்ட மும்பை அணி, அபுதாபியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும் கூட, பெரிய ஸ்கோரை அடிக்கும் உறுதியுடன் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினர்.

இஷான் கிஷன் 32 பந்தில் 84 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 82 ரன்களையும் குவிக்க, 20 ஓவரில் 235 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 236 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்திருந்தாலும், மும்பை அணியை பொறுத்தமட்டில் 64 ரன்களுக்கு சன்ரைசர்ஸை சுருட்டினால் தான் வெற்றி என்ற நெருக்கடியில் ஆடியது.

ஆனால் மும்பை அணியின் கனவை சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களே தகர்த்தனர். ஜேசன் ராயும், அபிஷேக் ஷர்மாவும் அருமையாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். 64 ரன்களில் சன்ரைசர்ஸ் அணி முதல் விக்கெட்டை இழந்தது. அத்துடன் மும்பை அணியின் பிளே ஆஃப் கனவும் தகர்ந்தது. மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், கேகேஆர் அணி 4வது அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. 
 

click me!