ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் எடுத்தது.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணியில் பிரித்வி ஷா மற்றும் பூபென் லால்வானி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 46 ரன்களில் ஆட்டமிழக்க, லால்வானி 37 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான முஷீர் கான், அஜிங்கியா ரஹேனே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் தாமோர் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
இதையடுத்து வந்த ஷாம்ஸ் முலானி 13 ரன்கள் சேர்த்தார். தனுஷ் கோட்டியன் 8 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 14 ரன்கள் சேர்க்க, கடைசி வரை அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் 69 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதன் மூலமாக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.