இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதே போன்று தான் கிரிக்கெட்டிலும், பிரபலங்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் வரும் லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவுதம் காம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோர் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக செயல்பட்டு வந்தனர். பாஜக சார்பில் போட்டியிட்டு டெல்லி கிழக்கு தொகுதி எம்பியான கவுதம் காம்பீர், ஐபிஎல் தொடர் காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதே போன்று ஹர்பஜன் சிங்கும் ஆம் ஆத்மி கட்சி எம்பியாக இருக்கிறார். இந்த நிலையில், இர்பான் பதானின் சகோதரரும், 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவருமான யூசுப் பதான் தற்போது அரசியலில் களம் காணா இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.