IPL 2022 எவ்வளவு காசுனாலும் பரவாயில்ல.. டெல்லி அணியில் ஆடிய வீரரை தட்டித்தூக்க துடியாய் துடிக்கும் மும்பை அணி

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 4:02 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன.

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடிவந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக இணைகின்றன. அதனால் அடுத்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன.

எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகிவருகிறது.  

வரும் 30ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் கடினமான விஷயம். ஏனெனில், அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பெரிய வீரர்கள். ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, டிரெண்ட் போல்ட் என பெரிய வீரர்கள் பலர் இருக்கும் நிலையில் இவர்களில் நால்வரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்பது கடினமான விஷயம்.

ரோஹித் சர்மா, பும்ரா, பொல்லார்டு மற்றும் இஷான் கிஷன் ஆகிய நால்வரையும் மும்பை அணி தக்கவைக்கவுள்ளது. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளது மும்பை அணி. ஆனால் அதற்கு முன்பாக 2 புதிய அணிகள், தலா 3 வீரர்களை எடுக்கலாம் என்பதால், அந்த அணிகள் இந்த வீரர்களை  எடுக்கக்கூட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் மும்பை அணி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்லில் அறிமுகமான 2015 ஐபிஎல் சீசனிலிருந்து டெல்லி அணிக்காக ஆடிவரும் ஷ்ரேயாஸ் ஐயர், 2018ல் சீசனின் இடையே கௌதம் கம்பீர் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக கடைசியாக நடந்த ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் ஆடவில்லை. அதனால் கேப்டன்சி ரிஷப் பண்ட்டிடம் கொடுக்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர் 2வது பாதி சீசனில் ஃபிட்னெஸுடன் டெல்லி அணிக்கு திரும்பியபோதிலும், ரிஷப் பண்ட்டே கேப்டனாக தொடர்ந்தார். ஷ்ரேயாஸ் ஐயரிடம் மீண்டும் கேப்டன்சி கொடுக்கப்படும் என கருதப்பட்ட நிலையில், அதை டெல்லி அணி செய்யவில்லை.

எனவே ஷ்ரேயாஸ் ஐயர் அதிருப்தியில் இருப்பதாகவும், அடுத்த சீசனில், தனக்கு கேப்டன்சியை தரும் ஒரு அணியில் ஆட அவர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயரை விடுவிக்க உள்ளதாக தெரிகிறது. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ககிசோ ரபாடா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய 4 வீரர்களையும் தக்கவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஷ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி விடுவிப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.

ஆனால், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பிற்கு தகுதியான, அதில் அனுபவமும் கொண்டவர் என்பதால், புதிதாக ஆடவுள்ள 2 அணிகள் உட்பட கேப்டனை தேடும் சில அணிகள் ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்க ஆர்வம் காட்டும் என்பதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கான டிமாண்ட் இந்த ஏலத்தில் அதிகமாக இருக்கும்.
 

click me!