பிரித்வி ஷாவின் அபார சதத்தால் கர்நாடகாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய மும்பை..! ஃபைனலில் மும்பை vs உ.பி மோதல்

By karthikeyan VFirst Published Mar 11, 2021, 7:33 PM IST
Highlights

பிரித்வி ஷாவின் அதிரடி சதத்தால் அரையிறுதியில் கர்நாடகா அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை அணி விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலுக்கு முன்னேறியது.
 

விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. குஜராத் மற்றும் உத்தர பிரதேச அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் உத்தர பிரதேச அணி வெற்றி பெற்றது. 

கர்நாடகா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி, பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும் ஆதித்ய தரே 16 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஷாம்ஸ் முலானி 45 ரன்கள் அடித்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், வழக்கம்போலவே தொடக்கம் முதலே தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்தார். சதத்திற்கு பின்னர் சோடை போய்விடாமல், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றி 165 ரன்களை குவித்தார் பிரித்வி ஷா. இந்த விஜய் ஹசாரே தொடர் முழுவதும் இதைத்தான் செய்துவருகிறார் பிரித்வி ஷா.

122 பந்தில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 165 ரன்களை குவித்து 41வது ஓவரில் ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவிற்கு இந்த போட்டியிலும் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் இம்முறையும் இரட்டை சதம் தவறிவிட்டது. ஆனாலும் அவர் அணிக்காக செய்ய வேண்டிய கடமையை ஒரு கேப்டனாகவும் ஒரு தொடக்க வீரராகவும் செவ்வனே செய்தார் பிரித்வி ஷா.

பிரித்வி ஷா 41வது ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழக்கும்போது மும்பை அணியின் ஸ்கோர் 243 ரன்கள் ஆகும். அதன்பின்னர் மும்பை வீரர்கள் இணைந்து கூடுதலாக 79 ரன்களை சேர்த்தனர். 49.2 ஓவரில் 322 ரன்களுக்கு மும்பை ஆல் அவுட்டானது.

இதையடுத்து 323 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய கர்நாடக அணியின் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான சமர்த் முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் 8 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய சித்தார்த்தும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியின் சீனியர்  வீரர் மனீஷ் பாண்டே ஒரே ரன்னில் வெளியேறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து கர்நாடக அணிக்கு நம்பிக்கையளித்த தேவ்தத் படிக்கல் 60 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கர்நாடக அணியின் தோல்வி உறுதியானது. 43வது ஓவரில் 250 ரன்களுக்கு கர்நாடக அணி ஆல் அவுட்டானதையடுத்து மும்பை அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

வரும் 14ம் தேதி டெல்லியில் இறுதி போட்டி நடக்கிறது. அதில் மும்பை மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதுகின்றன.
 

click me!