என்ன செய்யணுங்குறதுல நாங்க ரொம்ப தெளிவா இருக்கோம்.. இவரு செம கெத்தா பேசுறாரே

By karthikeyan VFirst Published Jul 23, 2019, 5:11 PM IST
Highlights

உலக கோப்பைக்கு பின்னர் சில விஷயங்கள் மாற தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை மனதில்வைத்து சில அதிரடி மாற்றங்கள் இப்போதே செய்யப்பட்டுள்ளன.

உலக கோப்பையில் தோற்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. 

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2019 ஐபிஎல் சீசனில் ஆடி கவனத்தை ஈர்த்த ராகுல் சாஹர் ஆகிய இருவருக்கும் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு தேவைப்பட்டபோது குல்தீப் - சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவில்லை. 

அதுமட்டுமல்லாமல் அணிக்கு வந்த புதிதில் குல்தீப்பின் வேரியேஷன்களையும் கையசைவுகளையும் கணிக்கமுடியாமல் திணறிய எதிரணி பேட்ஸ்மேன்கள், தற்போது அதை கண்டறிந்துவிட்டதால் இவர்களின் பவுலிங் எடுபடவில்லை. குல்தீப்பிடமாவது வேரியேஷன்கள் இருக்கின்றன. ஆனால் சாஹலிடம் அதுவும் இல்லை. அவர் இதுவரை அணியில் இருந்தது கோலியின் புண்ணியத்தால்தான். 

உலக கோப்பைக்கு பின்னர் சில விஷயங்கள் மாற தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை மனதில்வைத்து சில அதிரடி மாற்றங்கள் இப்போதே செய்யப்பட்டுள்ளன. டி20 அணியில் மட்டுமாவது ஆடிவந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனிக்கு டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இவ்வாறு பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுவரும் நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தயாரிப்பு குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அணியின் எதிர்காலம் குறித்த திட்டம் எங்களிடம் தெளிவாகவுள்ளது. டி20 உலக கோப்பைக்குள்ளாக சிறந்த அனி ஃபார்மாகிவிடும். கோர் அணி ஏற்கனவே தயாராகவுள்ளது. சில இடங்களுக்கான வீரர்கள் மட்டும் உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அணி உறுதி செய்யப்பட்டுவிடும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் திட்டவட்டமாகதெரிவித்துள்ளார். 
 

click me!