நீ அவ்வளவு யோக்கியனா இருந்தா அதையல்லவா செய்திருக்கணும்.. அம்பாதி ராயுடு விஷயத்தில் தேர்வுக்குழு தலைவரை தெறிக்கவிடும் அசாருதீன்

By karthikeyan VFirst Published Jul 23, 2019, 4:38 PM IST
Highlights

அணி தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நக்கலாக டுவீட் செய்ததால் தான் ராயுடு புறக்கணிக்கப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ராயுடுவின் புறக்கணிப்பில் உள்நோக்கம் இருக்கிறதா என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 

இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவருகிறது. குறிப்பாக நான்காம் வரிசையில் நீடித்துவந்த சிக்கலை தீர்க்கும் விதமாக இரண்டு ஆண்டுகாலம் தேடுதல் படலம் நடத்தப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, ரெய்னா ஆகியோர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். ஒருவழியாக கடந்த ஆண்டு ராயுடுவை உறுதி செய்த இந்திய அணி நிர்வாகம், கடைசி நேரத்தில் உலக கோப்பை தொடரில் அவரை கழட்டிவிட்டது. 

விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால் அவர் உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டார். விஜய் சங்கர் 3டி பிளேயர் என்று கூறி அவரது தேர்வை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நியாயப்படுத்தினார். 

இதனால் அதிருப்தியடைந்த ராயுடு, உலக கோப்பையை பார்க்க 3டி கண்ணாடி ஆர்டர் செய்திருப்பதாக டுவீட் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே இரண்டு முறை ராயுடுவை எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும்கூட ராயுடு புறக்கணிக்கப்பட்டார். தவான் காயமடைந்த பிறகு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டும், காயத்தால் விலகிய விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். மாற்று வீரர்களுக்கான பட்டியலில் இருந்த ராயுடுவை அணியில் எடுப்பதற்கு 2 முறை வாய்ப்பிருந்தும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராயுடு, அதிரடியாக ஓய்வை அறிவித்தார். 

அணி தேர்வின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நக்கலாக டுவீட் செய்ததால் தான் ராயுடு புறக்கணிக்கப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. ராயுடுவின் புறக்கணிப்பில் உள்நோக்கம் இருக்கிறதா என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ராயுடுவை உலக கோப்பை அணியில் எடுக்காததில் எந்தவித உள்நோக்கமோ தனிப்பட்ட விவகாரமோ கிடையாது. சரியான காம்பினேஷனில் அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவரை எடுக்க முடியவில்லை. ராயுடு டி20யில்(ஐபிஎல்) நன்றாக ஆடியதன் அடிப்படையில் அவர் மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் அணியில் நாங்கள் தான் எடுத்தோம். அப்போது ராயுடுவை எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து எடுத்தோம்.

அதன்பின்னர் அவர் ஃபிட்னெஸ் டெஸ்டில் ஃபெயில் ஆனபோது, அவருக்கு ஃபிட்னெஸ் ட்ரெய்னிங் கொடுத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்தோம். எனவே ராயுடுவுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ராயுடுவை எடுக்க முடியாமல் போய்விட்டது.

ஷிகர் தவான் காயமடைந்த பிறகு தொடக்க வீரராக இறங்குவதற்கு கேஎல் ராகுல் அணியில் இருந்தார். அதனால் அவர் மாற்று தொடக்க வீரராக களமிறங்கிவிட்டார். ஆனால் அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லை என்பதால் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்று அணி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தோம்.

விஜய் சங்கர் காயத்தால் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக தொடக்க வீரர் மயன்க் அகர்வாலை எடுத்தோம். அதற்கும் அணி நிர்வாகத்தின் கோரிக்கைதான் காரணம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க டைவ் அடிக்கும்போது ராகுல் கீழே விழுந்தார். அதன்பின்னர் அந்த போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. எனவே அவரது உடற்தகுதி குறித்த அச்சமும் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. எனவே தான் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்று அணி நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று மயன்க் அகர்வாலை அணியில் எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். 

இந்த விளக்கம் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ள அசாருதீன், உலக கோப்பை அணியில் ஏதேனும் ஒரு வீரர் காயத்தால் வெளியேற நேரிட்டால், மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் ஒரு வீரரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். அணி தேர்வாளராக இருப்பவர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கேட்பதற்கெல்லாம் தலையாட்ட கூடாது. அவர்கள் எந்த வீரரை வேண்டுமானாலும் கேட்பார்கள். ஆனால் இவர் தான் வீரர்; இவரைத்தான் அனுப்புவோம். இவரை வைத்துத்தான் நீங்கள் ஆடவேண்டும் என்று திட்டவட்டமாக தேர்வாளர்கள் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து கேப்டனும் பயிற்சியாளரும் கேட்பதற்கு எல்லாம் உடன்படக்கூடாது. 

நான் கேப்டனாக இருந்தபோது கூட, நிறைய வீரர்களை கேட்டிருக்கிறேன். ஆனால் தேர்வாளர்கள் அவர்களை கொடுக்க மறுத்து, நாங்கள் கொடுக்கும் வீரர்களை வைத்துத்தான் ஆட வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக தெரிவித்திருக்கின்றனர். எனவே தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று அசாருதீன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!