வில்லியம்சன் தான் அதுக்கு தகுதியானவர்.. நான் இல்ல.. பெருந்தன்மையா பேசிய பென் ஸ்டோக்ஸ்

By karthikeyan VFirst Published Jul 23, 2019, 4:30 PM IST
Highlights

நியூசிலாந்திடம் இருந்து தனி ஒருவனாக போராடி இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்டோக்ஸும் பிறப்பால் நியூசிலாந்துக்காரர் தான். 

உலக கோப்பை இறுதி போட்டியை பற்றி நிறைய எழுதியாயிற்று. உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் அபாரமாக ஆடி வெற்றிக்காக போராடின. போட்டி டிரா ஆகி, பின்னர் முடிவை தீர்மானிப்பதற்காக வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டிரா ஆனதால், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 

இந்த போட்டியில் தார்மீக அடிப்படையில் எந்த அணியும் தோற்கவில்லை என்பதுதான் உண்மை. தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியை தனி ஒருவனாக தூக்கி நிறுத்தியவர் பென் ஸ்டோக்ஸ் தான். பென் ஸ்டோக்ஸ் இல்லையென்றால் இங்கிலாந்துக்கு உலக கோப்பை இல்லை. இறுதி போட்டியில் அந்தளவிற்கு தனி ஒருவனாக போராடினார். 

அதேநேரத்தில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இல்லாத போதிலும், அணியின் பெரிய பலமான பவுலிங்கை பயன்படுத்தி தனது அபாரமான கேப்டன்சியாலும் பேட்டிங்காலும் கோப்பையை வெல்லுமளவிற்கு எடுத்துச்சென்றார் கேன் வில்லியம்சன். 

நியூசிலாந்திடம் இருந்து தனி ஒருவனாக போராடி இங்கிலாந்துக்கு கோப்பையை வென்று கொடுத்த ஸ்டோக்ஸும் பிறப்பால் நியூசிலாந்துக்காரர் தான். எனவே உலக கோப்பைக்கு பின்னர், இந்த ஆண்டின் சிறந்த நியூசிலாந்து குடிமகன் என்ற விருதுக்கு வில்லியம்சன் பெயரோடு ஸ்டோக்ஸ் பெயரும் நாமினேட் செய்யப்பட்டது. 

இந்நிலையில், சிறந்த நியூசிலாந்துக்காரர் என்ற விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கும் ஸ்டோக்ஸ் இதுகுறித்து பேசும்போது, அந்த விருதுக்கு என்னைவிட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நியூசிலாந்துக்காக பெருமைகளை தேடிக்கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் இந்த விருதுக்கு தகுதியானவர். நியூசிலாந்து அணிய்ன் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என்னைவிட இந்த விருதுக்கு தகுதியானவர். நியூசிலாந்து அணியை அபாரமாக வழிநடத்தி சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். எனவே இந்த விருது விஷயத்தில் ஒட்டுமொத்த நாடும் வில்லியம்சனின் பக்கம் இருக்க வேண்டும். அவர் தான் இந்த விருதுக்கு தகுதியானவர் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!