டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் தோனி காயத்துடன் களமிறங்கி விளையாடியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 191 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே 171 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், இந்தப் போட்டியில் கடைசி கட்டத்தில் வந்த தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 37 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.
சிஎஸ்கே தோல்வி அடைந்திருந்தாலும் தோனியின் தரிசனம் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆரவெல்லி அவனிஷ் விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்ட போது தோனி பயிற்சியில் இடம் பெறவில்லை. ஆதலால், தோனி விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது.
மேலும், போட்டியின் போது தோனி சிங்கிள் ஓடவே இல்லை. இந்த போட்டிக்கு பிறகு தோனி நொண்டி நொண்டி நடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த நிலையில் தான் தோனி சிங்கிள் ஓடாததற்கும், பயிற்சியில் இடம் பெறாததற்கும் என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.
தோனியின் இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக ஆரவெல்லி அவனிஷ் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும், சிஎஸ்கே தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி நொண்டி நொண்டி நடந்து செல்கிறார். அவருக்கு காலில் ஐஸ் பேக் கட்டப்பட்டிருந்தது. அதோடு, டெல்லி வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுடன் பேசிய புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தோனி மைதானத்திலிருந்து ஓய்வறைக்கு நடந்து செல்லும்போது ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் என்று பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்று தோனி கூறியதாக சிஎஸ்கே நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 18ஆவது போட்டி நடைபெறுகிறது. தோனி முழங்கால் காயத்தால் மீண்டும் அவதிப்படும் நிலையில் இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.