மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம் என்ன? எங்கு தவறு செய்கிறது?

By Rsiva kumarFirst Published Apr 1, 2024, 2:40 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் மட்டுமே இதுவரையில் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 14ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது ரோகித் சர்மாவை பீல்டிங்கில் அங்கும் இங்குமாக நிற்கவைத்து ஹர்திக் பாண்டியா அலைக்கழித்த சம்பவம் நடந்தது. இதே போன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் அணி விளையாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹர்திக் பாண்டியா பீல்டிங் ஷெட் செய்ய முடியாமல் தவித்தார்.

இதையடுத்து கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் கொடுத்துவிட்டு அவரை 30 யார்டு வட்டத்திற்குள்ளாக நிற்க வைத்துவிட்டு ஹர்திக் பாண்டியா பவுண்டரி லைனுக்கு பீல்டிங் செய்ய சென்றார். மேலும், ஹர்திக் பாண்டியா மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளரிடையே மோதலும் உண்டானதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியானது.

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை இல்லை என்றும், அணியில் வேறுபாடு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பலம்:

பலமான பேட்டிங் ஆர்டரை மும்பை இந்தியன்ஸ் கொண்டுள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷான், ரோகித் சர்மா, நமன் திர், டெவால்டு பிரேவிஸ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பலமான பேட்டிங் ஆர்டர் உண்டு. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினர். இவர்களைத் தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.

பந்து வீச்சு பலம்:

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி, ஷாம்ஸ் முலானி, லுக் உட், டிம் டேவிட், நமன் திர் என்று பந்து வீச்சிலும் பலமாக இருக்கிறது. 2 போட்டிகளில் விளையாடி பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். கோட்ஸியும் 2 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

பலவீனம்?

பலவீனம் என்று பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையின்மை, மரியாதையின்மை ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்த செயலை, 2ஆவது போட்டியில் திருத்திக் கொண்டார். அதே போன்று 2ஆவது போட்டியில் அவர் செய்த தவறை இந்தப் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தனது பொறுப்பை உணர்ந்து, நிதானமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ரசிகர்களின் ஆதரவு ஹர்திக் பாண்டியாவிற்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!