கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் உலக கோப்பையை வென்றிராத இந்திய அணி, 2013க்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் ஜெயிக்கவில்லை. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவருகிறது.
அதற்காக 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ள பிசிசிஐ, ஒருநாள் உலக கோப்பைக்கு முன் நடக்கும் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்த வீரர்களை மட்டுமே சுழற்சி முறையில் களமிறக்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் எல்லா காலக்கட்டத்திலுமே சிறப்பாக இருந்திருக்கிறது. இப்போதும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் கடந்த கால இந்திய அணியை விட இப்போதைய அணியை மேலும் வலுவானதாக தனித்து காட்டுவது, ஃபாஸ்ட் பவுலிங் தான்.
புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய சீனியர் பவுலர்களுடன் சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், பிரசித் கிருஷ்ணா என பல மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இந்திய அணிக்கு பவுலிங் யூனிட்டில் வலுசேர்க்கின்றனர்.
பும்ரா அடிக்கடி காயமடைவதால் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆடுவதில்லை. ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால், இந்திய ஆடுகளங்களில் ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமாருக்கு வேலையில்லை என்பதால் அவர் ஒருநாள் அணியில் எடுக்கப்படுவதில்லை. அதனால் சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய பவுலர்கள் இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை பிடித்துவிட்டனர்.
இவர்களில் சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அசத்திவருகிறார். 2019ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான சிராஜ், கடினமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை மேம்படுத்திக்கொண்டு, தனது திறமை மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டதுடன், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்குமளவிற்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை 21 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 38 விக்கெட் வீழ்த்தியுள்ள சிராஜ், இதில் 24 விக்கெட்டுகளை கடந்த ஓராண்டில் வீழ்த்தினார். கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசிய சிராஜ் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2022ம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஒருநாள் அணியில் முகமது சிராஜ் இடம்பெற்றிருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆடி அபாரமாக பந்துவீசி முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளையும், 2வது போட்டியில் ஒரு விக்கெட்டையும் என மொத்தம் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ், 729 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். விமர்சனங்களை எதிர்கொண்டு, திறமையை வளர்த்துக்கொண்டு, கடும் உழைப்பின் மூலமாக, பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் பல அபாரமான திறமைசாலிகளுக்கு மத்தியில் இந்திய ஒருநாள் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்த சிராஜ், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்து, பும்ராவே அணிக்கு திரும்பினாலும் தன்னை புறக்கணிக்கமுடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார் சிராஜ்.
727 புள்ளிகளுடன் ஜோஷ் ஹேசில்வுட் 2ம் இடத்திலும், 708 புள்ளிகளுடன் டிரெண்ட் போல்ட் 3ம் இடத்திலும் உள்ளனர்.