விராட் கோலியால் ஐசிசி கோப்பையை ஜெயிக்க முடியாததற்கு இதுதான் காரணம்.! கேப்டன்சி குறையை கூறி முகமது கைஃப் குட்டு

By karthikeyan VFirst Published Jul 16, 2021, 4:28 PM IST
Highlights

விராட் கோலியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாததற்கு என்ன காரணம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார்.
 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை 2 முறை வென்றது, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் வெற்றி, இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் வெற்றி என பல சாதனைகளை ஒரு கேப்டனாக படைத்து, வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தாலும், ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாதது அவரது கேப்டன்சி மீதான கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகிய முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தார் விராட் கோலி.

இந்நிலையில், விராட் கோலியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாததற்கான காரணம் குறித்து பேசியுள்ள முகமது கைஃப், தற்போதைய இந்திய அணியிடம் தெளிவு இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். விராட் கோலி கேப்டன்சியில் இப்படி செயல்படக்கூடாது. அந்தந்த நேரத்தில் எந்த வீரர் ஃபார்மில் இருக்கிறாரோ அவருக்குத்தான் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கிறார். இதுதான் கோலியின் பாணியாக இருக்கிறது. 

இந்த அணி மற்றும் அணி நிர்வாகம் ஆகிய இரண்டுமே, வீரர்களின் கடந்த கால சிறந்த ஆட்டங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. தற்போதைய ஃபார்மைத்தான் பார்க்கின்றனர். அதனால் தான் தவான் சில போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். ரோஹித்துக்கும் ஓய்வளிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் வாய்ப்பு பெற்றதும் அதனால் தான். வீரர்களுக்கு மதிப்பளிக்காமல், அந்தந்த நேரத்தில் ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதால் தான் கோலியால் ஒரு ஐசிசி கோப்பையை கூட ஜெயிக்க முடியவில்லை என்று கைஃப் விளாசியுள்ளார்.
 

click me!