
இந்திய வீரர் புஜாரா மற்றும் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக ஆடிவருகின்றனர். கவுண்டி கிரிக்கெட்டில் ஒரே அணியில் ஆடுவதால் புஜாரா - ரிஸ்வான் இடையே நல்ல நட்பு உருவாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட புஜாராவிடம் ரிஸ்வான் பல அறிவுரைகளை பெற்றுவருவதுடன், இருவருக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் என்றால் களத்தில் மட்டும்தான் மோதிக்கொள்வார்கள். களத்திற்கு வெளியே நல்ல நண்பர்களாக திகழ்வார்கள்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆடிய இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நல்ல உறவு இருந்துவந்திருக்கிறது. அந்தவகையில், இப்போது புஜாரா - ரிஸ்வான் இடையே மிகச்சிறந்த உறவு உருவாகியுள்ளது. புஜாரா மீது மிகச்சிறந்த மதிப்பீட்டை வைத்திருக்கிறார் ரிஸ்வான்.
புஜாரா குறித்து பேசிய ரிஸ்வான், புஜாராவும் தானும் மிகச்சிறந்த நண்பர்கள் என்று தெரிவித்ததுடன், புஜாராவின் திறமை குறித்தும், அவர் மீதான மதிப்பீடு குறித்தும் பேசினார்.
இதுகுறித்து பேசிய முகமது ரிஸ்வான், புஜாரா மிகச்சிறந்த மனிதர்; மிகுந்த அன்பானவர். அவரது கவனக்குவிப்பு அபரிமிதமானது. அவரிடம் இருந்து கண்டிப்பாக நிறைய கற்றுக்கொள்ளலாம். எனது கிரிக்கெட் கெரியரில் மிகச்சிறந்த கவனக்குவிப்பை பெற்றுள்ள 3 சிறந்த வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் முதல் வீரர் யூனிஸ் Bhai(யூனிஸ்கான்), 2வது வீரர் புஜாரா, 3வது வீரர் ஃபவாத் ஆலம் என்று புஜாராவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.