என்னை பொறுத்தமட்டில் அவருதாங்க பெஸ்ட் பேட்ஸ்மேன்..! மிரட்டல் வேகம் மிட்செல் ஜான்சனையே மிரட்டிய வீரர்

By karthikeyan VFirst Published Jun 18, 2020, 10:00 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஜான்சன், தான் பந்துவீசியதிலேயே யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் மிட்செல் ஜான்சன். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிட்செல் ஜான்சன், நல்ல வேரியேஷனில் வீசுவார். ஒரே மாதிரியான வேகத்தில் ஒரே மாதிரியான லைன்&லெந்த்தில் வீசாமல், ஒரு ஓவரில் 6 வித்தியாசமான பந்துகளை வீசக்கூடியவர். 

மிட்செல் ஜான்சன் தனது வேகம், வேரியேஷன் மற்றும் பவுன்ஸர்களின் மூலம் சர்வதேச அளவில் பல பேட்ஸ்மேன்களை மிரட்டியவர். அதிலும் 2013-14 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தனது வேகத்தின் மூலம் தெறிக்கவிட்ட மிட்செல் ஜான்சன், அந்த ஒரு தொடரில் மட்டும் 37 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பல பேட்ஸ்மேன்களை மிரட்டிய மிட்செல் ஜான்சன், தன்னை பொறுத்தமட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்றால், அது டிவில்லியர்ஸ் தான் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மிட்செல் ஜான்சன், டிவில்லியர்ஸ் தான் சிறந்த பேட்ஸ்மேன். இப்போதைய இளம் வீரர்கள் பலரும் சிறப்பாக ஆடுகிறார்கள். இளம் வீரர்கள் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடுவதில் டிவில்லியர்ஸைத்தான் பின்பற்றுகின்றனர். டிவில்லியர்ஸ் தான் முன்னோடி. எனவே இப்போதைய இளம் வீரர்களை விட சிறந்தவர் டிவில்லியர்ஸ். கிரீஸில் மிகவும் அமைதியாகவே இருப்பார். ஆனால் அவரது ஆட்டம் அபாரமாக இருக்கும். எல்லாவிதமான ஷாட்டுகளையும் கைவசம் கொண்டிருப்பவர் அவர் என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மரபாந்த பேட்டிங் ஸ்டைல், பாரம்பரியமான ஷாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, எந்தவிதமான பந்தையும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட வல்லவர் டிவில்லியர்ஸ். அதனால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என்றழைக்கப்படுகிறார். தன் சொந்த நாட்டிற்கு அப்பாற்பட்டு உலகம் முழுதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் டிவில்லியர்ஸ். 

114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8765 ரன்களையும், 228 ஒருநாள் போட்டிகளில் ஆடி டிவில்லியர்ஸ் 9577 ரன்களையும்,. 78 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1672 ரன்களையும் குவித்துள்ள டிவில்லியர்ஸ், திடீரென கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில் ஓய்வு அறிவித்தார்.  ஆனால் டி20 உலக கோப்பையில் அவரை மீண்டும் ஆடவைக்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இருப்பதால், டிவில்லியர்ஸ் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கலாம். டிவில்லியர்ஸ் ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார். 
 

click me!