இப்போதைக்கு ஐபிஎல் நடத்துறது நல்லது இல்ல.. உத்தரவு போடாமல் அறிவுரை சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சகம்

By karthikeyan VFirst Published Mar 21, 2020, 11:58 AM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் இந்த சூழலில், ஐபிஎல்லை நடத்துவது நல்லதல்ல என்று வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவரும் நிலையில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் 258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். கிரிக்கெட் தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. 

கிரிக்கெட் ரசிகர்களின் 2 மாத கால திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. 

பிரிஜேஸ் படேல் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் கங்குலி, ஜெய் ஷா, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல்லை நடத்துவது குறித்து விவாதித்தனர். கூட்டத்திற்கு பின்னர், ஐபிஎல் போட்டிகளை விடவும் அதனால் கிடைக்கும் வருவாயை விடவும் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் இரண்டு மாதங்கள் நடக்கக்கூடிய மிகப்பெரிய தொடர். ஏற்கனவே 15 நாட்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானால், அதன்பின்னர் முழு தொடரை நடத்துவது கடினம். கொரோனா தீவிரம் குறையாவிட்டால் ஐபிஎல்லை நடத்துவதே சந்தேகம்.

ஐபிஎல் தாமதமாக தொடங்கப்பட்டால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். ஒரேயொரு நகரத்தில் மட்டும் ஐபிஎல் நடத்தப்படலாம் அல்லது வெளிநாட்டில் நடத்தப்படலாம். இல்லையென்றால் ஜூலை - செப்டம்பர் காலத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால் எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு தான் தெரியும். இதற்கிடையே, மக்களின் பாதுகாப்புதான் முக்கியமே தவிர. அதனுடன் ஒப்பிடுகையில் ஐபிஎல்லை நடத்துவது அவ்வளவு அவசியமான விஷயம் அல்ல. ஐபிஎல்லை விட நாட்டு மக்களின் நலனும் பாதுகாப்புமே முக்கியம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜீஜூ தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஐபிஎல் குறித்து பேசியுள்ள வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் தாமு ரவி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல்லை நடத்துவது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இப்படியொரு சூழலில் ஐபிஎல்லை நடத்த வேண்டாம் என்பதே எங்களது அறிவுரை. ஆனால் அதுகுறித்து ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிசிசிஐயோ ஐபிஎல் நிர்வாகக்குழுவோ அரசாங்கத்தை மிஞ்சியது இல்லை. அரசு என்ன சொல்கிறதோ அதை ஏற்றுத்தான் அவர்கள் செயல்படமுடியும். எனவே நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு திட்டவட்டமான முடிவெடுத்து உத்தரவிட்டால், அதை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். கொரோனா அச்சுறுத்தலால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூலி வேலைக்கு போகிறவர்களின் வருமானம் கூட பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்படியான சூழலில் ஐபிஎல்லை நடத்த வேண்டியது அவசியமான அல்லது அத்தியாவசியமான ஒன்று அல்ல. அப்படியிருக்கையில், நடத்தக்கூடாது என்பது எங்கள் அறிவுரை. நடத்துவதும் நடத்தாததும் அவர்கள் கையில் என்பது முரணான கருத்தாக உள்ளது. 

click me!