கொரோனாவை எதிர்கொள்வது எப்படி..? டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கத்துக்கங்க.. சச்சின் சொன்ன படிப்பினை

By karthikeyan VFirst Published Mar 21, 2020, 9:34 AM IST
Highlights

கொரோனாவிலிருந்து தப்பிக்க டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார்.
 

சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் அதிவேகமாக பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட, இத்தாலியில் அதன் தாக்கமும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. 

சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. எனவே கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றன. மக்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்தி கொள்வதே கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கான வழி. எனவே மக்கள் வீட்டை வெளியே வரவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டும் என்றும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறிவது முதற்கட்டம். அவர்களிடமிருந்து அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரவுவது இரண்டாவது கட்டம். அவர்களிடமிருந்து பொது சமூகத்திற்கு பரவுவது மூன்றாவது கட்டம். அப்படி பொதுச்சமூகத்திற்கு பரவிவிட்டால், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படக்கூடும். இதில் நாம் இப்போது இரண்டாவது கட்டத்தில் இருப்பதால், தற்காத்துக்கொண்டால், கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம்.

எனவே இரண்டாவது கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதிலேயே கொரோனாவை விரட்டுவதுதான் மேலும் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி. அதனால் இது முக்கியமான காலக்கட்டம். மக்கள், கைகளை கழுவி சுத்தமாக இருப்பதுடன், கைகளை கண்கள், மூக்கு, காதுகளில் வைத்துவிடாமல் இருக்க வேண்டும். இவையனைத்தையும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாமல் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்நிலையில், கொரோனாவை டெஸ்ட் கிரிக்கெட்டை மனதில் வைத்து எதிர்கொள்ள வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள கட்டுரையில், கிரிக்கெ தனித்துவமான ஒரு விளையாட்டு. வேகமாக நடத்தி முடிக்கக்கூடிய டி20 கிரிக்கெட் வந்துவிட்ட இந்த காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்த விவாதங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகிவரும் இந்த வேளையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியமாகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் என்பதே வெவ்வேறு கட்டங்களில் கம்பேக் கொடுப்பதுதான். முதல் இன்னிங்ஸில் சொதப்பினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இரண்டாவது இன்னிங்ஸ் இருக்கும். அதில் சுதாரித்துக்கொள்ளலாம். அதேபோலத்தான் கொரோனாவும்.. வெவ்வேறு நாடுகளில் கொரோனா, வெவ்வேறு கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நேர்மறையான மனநிலையுடன் கொரோனாவை தங்களது பாணியில் எதிர்கொள்ள வேண்டும்.

எல்லா நாடுகளுமே தங்களை ஒரு அணியாக நினைத்துக்கொள்ள வேண்டும். அனைவரிடமும் பேச வேண்டும், மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் முழுதும் கடுமையாக போராடி ஆடிவிட்டு, அடுத்த நாள் ஆட்டத்திலும் எப்படி கடுமையாக போராடுகிறோமோ அதையே பின்பற்ற வேண்டும். கொரோனா அச்சுறுத்தல், உண்மையாக நமது நமது கேரக்டருக்கு வைக்கப்பட்டிருக்கும் டெஸ்ட். அதுமட்டுமல்லாமல் நம் அனைவரையும் ஒற்றுமையாக இணைந்து எதிர்கொள்ள தூண்டியுள்ளது. ஒவ்வொரு செசனிலும் இந்த கொரோனா என்ற போரை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இதில் வெற்றி பெறுவோம் என்று சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

click me!