#ENGvsIND அடுத்த மேட்ச்ல அவனை தூக்கிட்டு இவனை சேருங்க..! இங்கி., அணிக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Aug 8, 2021, 4:08 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி முகத்தில் உள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

95 ரன்கள்  பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. எனவே 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், இந்திய அணி வெற்றி பெற்றுவிடும்.

இந்த போட்டியில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், லார்ட்ஸில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றத்தை பரிந்துரை செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் 3ம் வரிசையில் ஆடும் ஜாக் க்ராவ்லியை நீக்கிவிட்டு, கவுண்டி வீரரான ஹசீப் ஹமீதை அணியில் எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளார் மைக்கேல் வான்.

பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமடித்த(267) ஜாக் க்ராவ்லி, அதற்கடுத்த இன்னிங்ஸ்களில் அடித்த ரன்கள் முறையே 9, 8, 5, 13, 53, 0, 9, 5, 2, 2, 0, 17, 27 மற்றும் 6 ரன்கள் ஆகும். அவர் தொடர்ந்து, ஸ்கோர் செய்ய திணறிவரும் நிலையில், அவரை நீக்க பரிந்துரைத்துள்ளார் மைக்கேல் வான்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், ஜாக் க்ராவ்லி ஹை-கிளாஸ் டெஸ்ட் பேட்ஸ்மேன். ஆனால் அவர் போதுமான ரன்கள் அடிக்கவில்லை. அவரை ஆஸ்திரேலியாவுக்கு(ஆஷஸ் தொடருக்கு) அழைத்து செல்லலாம். அந்த கண்டிஷன் அவருக்கு பொருத்தமாக இருக்கும். இப்போதைக்கு க்ராவ்லிக்கு ஒரு சூழலியல் மாற்றம் தேவை. எனவே ஜாக் க்ராவ்லியை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஹசீப் ஹமீதை சேர்க்கலாம். டேவிட் மலானையும் எடுக்கலாம் என்பதுதான் எனது கருத்து. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட்டின் டெஸ்ட் அணிக்கான திட்டத்தில் மலான் இல்லை என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!