இந்தியா அவங்க நோக்கத்துக்கு பண்றாங்க; நீங்களும் தட்டிக்கேட்க திராணியற்று போய் இருக்கீங்க! ஐசிசியை விளாசிய வான்

By karthikeyan VFirst Published Feb 27, 2021, 6:17 PM IST
Highlights

பிசிசிஐ தங்கள் நோக்கத்திற்கு பிட்ச் தயார் செய்வதாகவும், அதை ஐசிசி தட்டி கேட்பதில்லை என்றும் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர்  அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச்  4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.

இந்த டெஸ்ட்டில் படுதோல்வியடைந்ததையடுத்து வழக்கம்போலவே ஆடுகளத்தை குறைகூறிவருகின்றனர் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்களும்வீரர்களும். இந்திய ஆடுகளங்களை விமர்சிப்பதில் எப்போதுமே முந்திக்கொண்டு வருபவர் மைக்கேல் வான். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றபோது அமைதி காத்த மைக்கேல் வான் போன்ற ஒருசிலர், அதே சென்னை சேப்பாக்கத்தில் 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வென்றபோது, ஆடுகளத்தை விமர்சித்தனர். அதேபோலவே 3வது டெஸ்ட்டில் இந்திய அணி வென்றதையடுத்து, அகமதாபாத் ஆடுகளம் படுமட்டமாக இருந்ததாக விமர்சிக்கிறார் மைக்கேல் வான். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி சென்று ஆடும்போது, அந்த நாடுகள் அவற்றிற்கேற்ப ஆடுகளங்களை தயார் செய்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இந்திய அணி தோற்றாலும் ஜெயித்தாலும், எந்த விதமான சவால்களை எதிர்கொண்டாலும் இந்தியா சார்பில் குறை கூறுவதேயில்லை. எப்படியான கண்டிஷனையும் சமாளித்தே இந்திய அணி ஆடுகிறது. ஆனால் இந்தியாவில் வந்து தோல்வியை தழுவினால் மட்டும் இங்கிலாந்து மாதிரியான அணிகளின் முன்னாள் வீரர்களும் கேப்டன்களும் இந்திய ஆடுகளங்களை குறைகூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அகமதாபாத் பிட்ச் தொடர்பாக கவாஸ்கர், ரோஹித் சர்மா, விராட் கோலி என முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் விளக்கமளித்தும் கூட, விமர்சிப்பதை நிறுத்தவில்லை மைக்கேல் வான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வான், இந்தியா மாதிரியான சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி கேள்வி கேட்பதேயில்லை. ஐசிசி நிர்வாக குழு, இந்தியாவிற்கு எப்படி தேவையோ அப்படியான ஆடுகளங்களை தயார் செய்ய அனுமதிக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட்டை கடுமையாக பாதிக்கிறது என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!