இவரு கேப்டனா இருக்குற வரை அந்த பிளேயருக்கு டீம்ல கண்டிப்பா இடம் கிடைக்காது..! அடித்துக்கூறும் முன்னாள் கேப்டன்

By karthikeyan VFirst Published Jun 6, 2020, 2:12 PM IST
Highlights

இயன் மோர்கன் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் வரை, அலெக்ஸ் ஹேல்ஸூக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்க மாட்டார் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்தவர் அலெக்ஸ் ஹேல்ஸ். 2011ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அலெக்ஸ் ஹேல்ஸ், 2014ம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் அணியிலும் 2015ம் ஆண்டு டெஸ்ட் அணியிலும் ஆட வாய்ப்பு பெற்றார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ்.

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆடியிருக்க வேண்டியவர் ஹேல்ஸ். ஆனால் உலக கோப்பைக்கு ஒருசில மாதங்களுக்கு முன், உற்சாக போதை மருந்து எடுத்துக்கொண்டதால், அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். அதனால் உலக கோப்பையில் அவரால் ஆடமுடியாமல் போனது. அதன்பின்னர் மீண்டும் இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படவேயில்லை. 

கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் வீரர்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தனர். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் 55 பேரை பயிற்சிக்காக அழைத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 28 டெஸ்ட் வீரர்கள் மற்றும் 27 ஒருநாள் - டி20 வீரர்கள் என மொத்தம் 55 வீரர்களை பயிற்சிக்கு அழைத்தது. அந்த 55 பேரில் அலெக்ஸ் ஹேல்ஸ் பெயர் இடம்பெறவில்லை. அவரது தவறுக்காக ஏற்கனவே ஓன்றரை ஆண்டுகளாக அணியில் எடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார். அதுவே பெரிய தண்டனை தான். ஆனால், இப்போது மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார் அலெக்ஸ் ஹேல்ஸ். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அலெக்ஸ் ஹேல்ஸ் புறக்கணிக்கப்பட்டது மிகவும் கடினமான முடிவு. அவர் தவறு செய்திருக்கிறார்; அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கான விலையை அவர் கொடுத்துவிட்டார். உலக கோப்பையை வென்ற அணியில் அவரால் ஆடமுடியாமல் போனது. அதுவே அவருக்கு பெரிய இழப்பு தான். அப்படியிருக்கையில், மீண்டும் புறக்கணித்திருப்பது ரொம்ப கடினமான முடிவு. எந்த ஒரு வீரருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து. அவர் சில லீக் தொடர்களிலும் நன்றாகவே ஆடியிருக்கிறார். 

அந்த 55 வீரர்களில் 27 வீரர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட் வீரர்கள். அந்த 27 பேரில் ஒருவராக இடம்பெறுவதற்கான தகுதி கண்டிப்பாக அலெக்ஸ் ஹேல்ஸூக்கு இருக்கிறது. ஆனால் இயன் மோர்கன் கேப்டன்சியில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ”நான்(மோர்கன்) தான் கேப்டன் அலெக்ஸ்.. நான் கேப்டனாக இருக்கும் வரை நீ எப்படி இங்கிலாந்து அணிக்காக ஆடுகிறாய் என்று பார்க்கிறேன்” என்கிற தொனியில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு மோர்கன் சொல்லும் செய்தியாகவே, ஹேல்ஸின் புறக்கணிப்பு அமைந்திருக்கிறது. 

எனக்கு இயன் மோர்கனை ரொம்ப பிடிக்கும். அவர் மிகச்சிறந்த கேப்டன். இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் இயன் மோர்கன் தான். ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ் விவகாரத்தில், மோர்கன் இளகுவாக நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மனிதன் தவறு செய்வது இயல்புதான். உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ், அதன்பின்னர் ஏதாவது தவறு செய்தாரா என்று மோர்கன் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஒழுக்கமின்மையாக நடந்துகொண்டாரா என்பதை பார்க்க வேண்டும். அந்த மாதிரியான தவறுகள் எதையும் அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த ஓராண்டாக செய்யவில்லை. அவர் இங்கிலாந்து அணிக்காக ஆட தகுதியான வீரர். எனவே அவரை மீண்டும் அணியில் எடுப்பது குறித்து மோர்கன் பரிசீலிக்க வேண்டும் என மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!