நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவருதான்..! தோனியின் நேர்மையான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 5, 2020, 11:00 PM IST
Highlights

தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே யாருடைய பவுலிங் ஆடுவதற்கு மிகக்கடினம் என்று தோனி தெரிவித்துள்ளார். 
 

தோனி இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம். 2004ல் இந்திய அணியில் அறிமுகமாகி, அடுத்த மூன்றே ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனான அடுத்த ஒரு சில மாதங்களிலேயே டி20 உலக கோப்பையை(2007) இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 

அதன்பின்னர் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு அனைத்துவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தார். தோனி அவரது கெரியரின் பிற்காலத்தில் அவரது சிறந்த கேப்டன்சியால் பெருமை பெற்று, சிறந்த கேப்டன் என்பதே அவரது அடையாளமாக மாறியிருந்தாலும், அவரது கெரியரின் தொடக்கத்தில் அவரது அதிரடியான பேட்டிங்கால் தான் அணியில் நிரந்தர இடம்பிடித்தார். 

3ம் வரிசையில் இறங்கி கெரியரின் தொடக்கத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய சதங்களை விளாசி அசத்தினார். அவர் கேப்டனான பிறகு அணியின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்களை மேல்வரிசையில் இறக்கிவிட்டு, தோனி பின்வரிசையில் இறங்கிக்கொண்டார். ஆனால் பின்வரிசையிலும் மிரட்டலாக பேட்டிங் ஆடி, பெஸ்ட் ஃபினிஷராக உருவெடுத்து அந்த புகழை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளார். 

ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தியதே தோனி தான். தனது கெரியரில் மிகச்சிறந்த பல பவுலர்களை எதிர்கொண்டு தோனி ஆடியுள்ளார். தோனியின் அதிரடியை கண்டு பயந்த பவுலர்கள் தான் இருக்கிறார்கள். 

அப்படியிருக்கையில், பல பவுலர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் அச்சுறுத்திய தோனி, தான் யாருடைய பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார் என்று ஒருமுறை தெரிவித்திருக்கிறார். 

அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, பொதுவாக ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்வது என்பதே கடினமானதுதான். அதில், ஒருவரை மட்டும் தேர்வு செய்ய வேண்டுமென்றால், நான் கண்டிப்பாக ஷோயப் அக்தரைத் தான் தேர்வு செய்வேன். ஏனெனில், அவரது பவுலிங் அதிவேகமாக இருக்கும். துல்லியமான யார்க்கர், எதிர்பாராத நேரத்தில் மிரட்டலான பவுன்ஸர் என அனைத்துவிதமான பந்துகளையும் கலந்து வீசுவார். அதனால் அவரது பவுலிங்கை கணிப்பது மிகக்கடினம் என்று தோனி தெரிவித்துள்ளார். 
 

click me!