இந்தியாவை பற்றி தெரியாத ஊடகங்களின் குருட்டுத்தனமான விமர்சனங்ளால் என் இதயத்தில் ரத்தம் சொட்டுகிறது - ஹைடன்

By karthikeyan VFirst Published May 16, 2021, 5:57 PM IST
Highlights

இந்தியா கொரோனாவை எதிர்கொள்ளும் விதத்தை சர்வதேச ஊடகங்கள் விமர்சித்துவரும் நிலையில், அவற்றிற்கு தக்க பதிலடி கொடுத்து இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இந்தியா மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார் மேத்யூ ஹைடன். 
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுதல், லாக்டவுன் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது இந்திய அரசு. ஆனாலும் இந்தியாவின் செயல்பாட்டை சர்வதேச ஊடகங்கள் சில மிகக்கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், அவற்றிற்கு எதிராகவும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார் ஆஸி., முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்.

ஹைடன் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா அற்புதமான தேசம். கொரோனா நோய்த்தொற்றால் இந்தியா பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை பற்றி முழுதாக தெரியாத சர்வதேச ஊடகங்கள், கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் செயல்பாட்டை விமர்சித்து கொண்டிருக்கின்றன. 

வேகமாக பரவும் கொரோனா தொற்றுக்கு எதிராக 140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா போராடிக்கொண்டிருக்கும் நிலையில், சர்வதேச ஊடகங்கள் இந்தியாவை சாடுகின்றன. எந்தவொரு பொதுவான திட்டத்தையும் செயல்படுத்துவதற்கே, 140 கோடி மக்கள் தொகை என்பது பெரும் சவாலாக இருக்கும். அப்படியிருக்கையில், கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது எவ்வளவு சிரமம்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் இந்தியாவிற்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். குறிப்பாக தமிழகத்தை நான் என் ஆன்மீக வீடாக நினைக்கிறேன். இப்படி மிகப்பெரிய பன்முகத்தன்மையும், பல்வேறு விதமான கலாச்சாரங்களையும் கொண்ட இந்தியாவையும், இந்தியாவை வழிநடத்தும் தலைவர்களையும் அதிகாரிகளையும் நான் பெரிதாக மதிக்கிறேன். இந்தியாவில் நான் சென்ற இடமெல்லாம் மக்கள் என்னை அன்புடனும் கனிவாகவும் நடத்தினர். அவர்களுக்கும் அவர்களது அன்பிற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

இத்தனை ஆண்டுகளில் இந்தியாவுடன் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. இதை நான் பெருமையாக சொல்கிறேன். அதனால் தான், இந்தியாவின் பிரச்னையை பற்றியும், இந்திய மக்களையும், அவர்கள் எதிர்கொண்டுவரும் எண்ணற்ற சவால்களை பற்றியும் எதுவுமே புரியாத ஊடகங்கள் தவறாக பேசும்போது, அதை அறிந்து என் இதயத்தில் ரத்தம் சொட்டுகிறது. 

ஐபிஎல்லில் நானும், பிற ஆஸ்திரேலிய வீரர்களும் பல ஆண்டுகளாக ஆடிவருகிறோம். இந்தியாவை பற்றி எனக்கு தெரியும். இந்தியாவை பற்றி தெரியாதவர்களுக்கு ஊடகங்களின் விமர்சனங்கள், இந்தியா மீதான தவறான பார்வையை கொடுக்கும். எனவே தான் என் கருத்தை தெரிவிக்க விரும்பினேன்.

வளமான நாகரிகம் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவிற்கு நிகராக வெகுசில நாகரிகங்களே உள்ளன. எனவே இந்தியா பிரச்னையில் இருக்கும் சூழலில், அதைப்பற்றி தெரியாமல் விமர்சிப்பதை தவிர்த்து, இந்தியாவின் பன்முக கலாச்சார, பிராந்திய, மொழி உள்ளிட்ட மற்ற விஷயங்களை பாராட்டுவதே நம்மால் முடிந்த குறைந்தபட்ச உதவியாக இருக்கும் என்று மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேத்யூ ஹைடனின் கருத்து இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா, இந்தியா மீதான பார்வைக்கும் அன்புக்கும் ஹைடனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 

Extracts from a heartfelt blog on India by A cricketer whose heart is even bigger than his towering physical stature. Thank you for the empathy and your affection... pic.twitter.com/h671mKYJkG

— anand mahindra (@anandmahindra)
click me!