கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான சாதனை.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த லபுஷேன்

By karthikeyan VFirst Published Aug 25, 2019, 10:55 AM IST
Highlights

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்துகொண்டிருக்க, மறுமுனையில் நங்கூரம் போட்டு 74 ரன்கள் அடித்தார் லபுஷேன். அவரது பொறுப்பான ஆட்டத்தால்தான் ஆஸ்திரேலிய அணி 179 என்ற ரன்னையாவது எடுத்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது. 
 

ஆஸ்திரேலிய அணி வீரர் லபுஷேன், ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் தனித்துவம் வாய்ந்த ஒரு சாதனையை செய்து பெரிய பெரிய லெஜண்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் தலைசிறந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக அணியில் இணைந்தவர் லபுஷேன். அவ்வளவு எளிதாக நிரப்பிவிட முடியாத ஸ்மித்தின் இடத்தை, அவர் இல்லாத குறை தெரியாத அளவிற்கு, ஸ்மித்தின் இடத்தை நிரப்பினார் லபுஷேன். 

லீட்ஸில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்துகொண்டிருக்க, மறுமுனையில் நங்கூரம் போட்டு 74 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தால்தான் ஆஸ்திரேலிய அணி 179 என்ற ரன்னையாவது எடுத்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த லபுஷேன், 80 ரன்களை குவித்தார். இதையடுத்து 359 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய லபுஷேன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான ஒரு சாதனை பட்டியலில் தனது பெயரை இணைத்து கொண்டுள்ளார். அதாவது எதிரணி, ஒரு இன்னிங்ஸில் அடித்த ஸ்கோரை விட, இரண்டு இன்னிங்ஸிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை பட்டியலில் லபுஷேன் இணைந்துள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 67 ரன்கள் மட்டுமே அடித்தது. லபுஷேன், இரண்டு இன்னிங்ஸிலும்(74,80) இங்கிலாந்து அடித்த ஸ்கோரை விட அதிகமாக அடித்தார்.

இதன்மூலம் இந்த சாதனையை செய்த ஐந்தாவது வீரர் லபுஷேன் ஆவார். இதற்கு முன் டான் பிராட்மேன், கார்டான் கிரீனிட்ஜ், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது லபுஷேனும் இணைந்துள்ளார். 

1. டான் பிராட்மேன்(ஆஸ்திரேலியா) - 132, 127 ரன்கள் vs இந்தியா(125 ரன்கள்) - 1948

2. கார்டான் கிரீனிட்ஜ்(வெஸ்ட் இண்டீஸ்) - 134, 101 ரன்கள் vs இங்கிலாந்து(71 ரன்கள்) - 1976

3. மேத்யூ ஹைடன்(ஆஸ்திரேலியா) - 197, 103 ரன்கள் vs இங்கிலாந்து(79 ரன்கள்) - 2002

4. ஜஸ்டின் லாங்கர்(ஆஸ்திரேலியா) - 191, 97 ரன்கள் vs பாகிஸ்தான்(72 ரன்கள்) - 2004

5. மார்னஸ் லபுஷேன்(ஆஸ்திரேலியா) - 74, 80 ரன்கள் vs இங்கிலாந்து(67 ரன்கள்) - 2019

click me!