ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்த இங்கிலாந்து கேப்டன்.. 2 டீமுக்கும் இடையே கடும் போட்டி.. வெற்றி யாருக்கு..?

By karthikeyan VFirst Published Aug 25, 2019, 10:05 AM IST
Highlights

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் அடித்தது. எனவே 246+12=358 ரன்கள். 359 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. 
 

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஆர்ச்சரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். வார்னரும் லபுஷேனும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். வார்னர் 61 ரன்களும் லபுஷேன் 74 ரன்களும் அடித்தனர். இவர்கள் இருவரை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் படுமோசமாக சொதப்பினர். ஜோ டென்லி மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தார். அதுவும் வெறும் 12 ரன்கள். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி வெறும் 28 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடி 67 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்கள் அடித்தது. எனவே 246+12=358 ரன்கள். 359 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி. 

கடைசி இன்னிங்ஸில் 359 ரன்கள் அடிப்பது என்பது கடினம் என்றாலும், இரண்டரை நாள் மீதமிருந்ததால், இங்கிலாந்து அணிக்கு அவசரமே இல்லை. ஆனால் விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட வேண்டிய அவசியம் இருந்தது. ஜேசன் ராயும் பர்ன்ஸும் இறங்கினர். இந்த முறையும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி சோபிக்கவில்லை. பர்ன்ஸ் 7 ரன்களிலும் ராய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜோ ரூட்டும் டென்லியும் அந்த பணியை சரியாக செய்தனர். முதல் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ் என எதிலுமே சரியாக ஆடாத ரூட், இந்த முறை அந்த தவறை செய்யவில்லை. தான் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடினார். 

ரூட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து டென்லியும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 126 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். அரைசதத்துக்கு பிறகும் ரூட் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, டென்லி அரைசதம் அடித்த மாத்திரத்தில் சரியாக 50 ரன்களில் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் சுத்தமாக அடிக்க முற்படவேயில்லை. விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர், 50 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது. ரூட் 75 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 203 ரன்கள் மட்டுமே தேவை. இங்கிலாந்து அணியிடம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. எனினும் ரூட்டும் ஸ்டோக்ஸும் பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தாக வேண்டும். அப்போதுதான் வெற்றியை உறுதி செய்யமுடியும். 

இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்து இந்த போட்டியிலும் வென்றுவிடலாம் என்ற ஆஸ்திரேலிய அணியின் நினைப்பிற்கு ஆப்படித்தார் ஜோ ரூட். ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அவருக்கு நிகரான சிறந்த வீரரான ரூட் சரியாக ஆடாததுதான் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆஷஸ் தொடரில் இதுவரை சரியாக ஆடாத ரூட், இந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை அதிகரித்துவிட்டார். நான்காம் நாளான இன்றைய ஆட்டம் மிகக்கடுமையாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் போட்டியின் முடிவு தெரிந்துவிடும். 
 

click me!