பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 11ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டி இன்று நடக்கிறது. லக்னோவில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும், கேஎல் ராகுல் பிளேயிங் 11ல் ஒரு பேட்ஸ்மேனாக இடம் பெற்றிருக்கிறார்.
இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குகிறார். மேலும் லக்னோ அணியில் மாயங்க் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது பிளேயிங் 11ல் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், கேஎல் ராகுலுக்குப் பதிலாக நவீன் உல் ஹக் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், ஆயூஷ் பதோனி, நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், மோசின் கான், மாயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஷாங்க் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, ராகுல் சாகர், அர்ஷ்தீப் சிங்
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். குறைந்தபட்சமாக லக்னோ 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 201 ரன்கள் எடுத்துள்ளது. அதோடு குறைந்தபட்சமாக 133 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.