பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 11ஆவது லீக் போட்டி இன்று இரவு லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரையில் நடந்த 9 லீக் போட்டிகளில் அந்தந்த ஹோம் மைதான அணிகள் வெற்றி பெற்றன. ஆனால், நேற்று நடந்த 10ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அதனுடைய ஹோம் மைதானமான எம் சின்னச்சுவாமி மைதானத்தில் கேகேஆர் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹோம் மைதான அணி வெற்றி என்ற டிரெண்டை மாற்றியது. இந்த நிலையில் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், ஹோம் மைதான அணியின்படி லக்னோ ஜெயிக்குமா அல்லது பஞ்சாப் ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். குறைந்தபட்சமாக லக்னோ 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 201 ரன்கள் எடுத்துள்ளது. அதோடு குறைந்தபட்சமாக 133 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ அணியில் இடம் பெற்றிருந்த டேவிட் வில்லிக்குப் பதிலாக மேட் ஹென்றி அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.