தனது ஹோம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 199/8 ரன்கள் குவித்து இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 11ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோ அணியில் குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கேஎல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 9 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் நிக்கொலஸ் பூரன் இருவரும் இணைண்டு அதிரடியாக விளையாடினர். இதில், குயீண்டன் டி காக் 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பூரனும் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 8 ரன்களிலும், ரவி பிஷ்னோய் 0 ரன்னிலும், மோசின் கான் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை அதிரடியாக விளையாடிய குர்ணல் பாண்டியா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களும் குவித்துள்ளது. இதன் மூலமாக இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை லக்னோ குவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. இந்த மைதானத்தில் நடந்த 38 டி20 போட்டிகளில் இதற்கு முன்னதாக இந்தியா 199 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது லக்னோ அணி 199 ரன்கள் குவித்துள்ளது.
லக்னோவில் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:
199/8 - லக்னோ vs பஞ்சாப், 2024
193/6 - லக்னோ vs டெல்லி, 2023
177/3 - லக்னோ vs மும்பை இந்தியன்ஸ், 2023
159/8 - லக்னோ vs பஞ்சாப், 2023
135/6 – குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ, 2023