பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 11ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு குயீண்டன் டி காக் 54 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 ரன்கள் எடுக்க, குர்ணல் பாண்டியா 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது.
பின்னர் 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் குவித்தது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராப்சிம்ரன் சிங் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜித்தேஷ் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ஷிகர் தவான் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லியாம் லிவிங்ஸ்டன் மட்டும் களத்தில் நின்றார். கடைசியில் அந்த ஓவரில் 19 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.