வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக ரிஷப் பண்ட், பும்ரா முதல் சிறந்த வீரர்கள் பலரும் விலகியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. அகமதபாத்தில் தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாகவும், குடும்ப சூழல் காரணமாகவும் சில வீரர்கள் விலகியுள்ளனர். அப்படி எந்தெந்த அணியிலிருந்து எந்தெந்த வீரர்கள் விலகியுள்ளனர் என்று பார்க்கலாம் வாங்க...
ரிஷப் பண்ட் - டெல்லி கேபிடல்ஸ்:
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளைத் தொடர்ந்து வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். தன்னைத் தானே வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ரிஷப் பண்டின், புகைப்படமும், வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் மட்டுமின்றி வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் உலகக் கோப்பை தொடரிலிருந்தும் விலகியுள்ளார். இவர், ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். தற்போது இவருக்குப் பதிலாக டேவிட வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜஸ்ப்ரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்:
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் முதலில் இடம் பெற்றிருந்த நிலையில், அதன் பிறகு விலகினார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் இடம் பெறவில்லை. அண்மையில் நியூசிலாந்தில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில், மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அவர் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பிரஷித் கிருஷ்ணா - ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா இடுப்பு எலும்பு முறிவு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கைல் ஜேமிசன் - சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஜே ரிச்சர்ட்சன் - மும்பை இந்தியன்ஸ்:
பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜே ரிச்சர்ட்சன் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியில் பாதியிலேயே விலகிய அவர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை. தற்போது வரையில் அவரது காயம் குறித்து எந்ததகலும் இல்லாத நிலையில், அவர் இடம் பெறுவது என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.