உம்ரான் மாலிக்கை ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் பிரெட் லீ கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற உறுதியில் தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இந்திய மண்ணில் ஒருநாள் உலக கோப்பையை வென்றது. அதற்கடுத்த 2 உலக கோப்பைகளிலும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி. இந்த முறை இந்தியாவில் உலக கோப்பை நடப்பதால் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது.
உலக கோப்பைக்கான ஆடும் லெவனை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துவிட்டது. காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. பும்ரா அதன்பின்னர் இந்திய அணியில் ஆடவேயில்லை. பும்ரா உலக கோப்பையில் ஆடுவது அவசியம் என்பதால் அவரது ஃபிட்னெஸில் பிசிசிஐ அதிக கவனம் செலுத்துகிறது.
இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!
இதற்கிடையே இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஆடிவருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. 118 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி எளிதாக அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய மிரட்டலான வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடவேண்டும் என்று பிரெட் லீ கூறியுள்ளார்.
இந்திய அணியில் எல்லா காலக்கட்டத்திலும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்ததில்லை. அந்த குறையை தீர்த்துவைத்தவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் ஃபாஸ்ட் பவுலரான உம்ரான் மாலிக் தான்.
ஐபிஎல்லில் 150-160 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான உம்ரான் மாலிக், இதுவரை 8 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் ஆடி முறையே 13 மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உம்ரான் மாலிக் அசால்ட்டாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியவர் என்பதால் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் அவரை ஆடவைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறியிருந்தனர். ஆனால் அவர் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. இந்நிலையில், ஒருநாள் உலக கோப்பையில் அவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று பிரெட் லீ அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரெட் லீ, உம்ரான் மாலிக்கை கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையிலேயே உம்ரான் மாலிக்கை ஆடவைத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. எனது முதன்மையான தேர்வு உம்ரான் மாலிக் தான். அவரை மாதிரி அதிவேகமாக பந்துவீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலரை எதிர்கொள்வது கடினம். எதிரணி பேட்ஸ்மேன்களை தனது அதிவேகமான பவுலிங்கால் மிரட்டகூடிய பவுலர் உம்ரான் மாலிக் என்று பிரெட் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.