டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின்..? மீண்டும் டி20 கிரிக்கெட்டில் களம் காண்கிறார்?

By karthikeyan VFirst Published Jul 15, 2021, 6:10 PM IST
Highlights

அஷ்வின் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராகவும், நட்சத்திர வீரராகவும் கோலோச்சியவர் தமிழகத்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து ஃபார்மட்டுகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்ற பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியிலிருந்து அஷ்வினை ஓரங்கட்டிவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அஷ்வின் 2017ம் ஆண்டுக்கு பிறகு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசினால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என்று லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன், ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த சில ஆண்டுகளில் டாப் பவுலராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கண்டிப்பாக உதவும். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அஷ்வின் மிகச்சிறப்பாக வீசக்கூடியவர். அஷ்வின் அவரது ஃபீல்டிங் மற்றும் ஃபிட்னெஸிலும் அதிக கவனம் செலுத்தி மேம்படுத்தியிருக்கிறார்.  எதிரணியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு எதிரான மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின். அஷ்வின் கடினமாக உழைத்து ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசினால், டி20 அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கலாம். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெறலாம் என்று பாசிட்டிவாக பேசியுள்ளார் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன்.
 

click me!