#SLvsIND ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஆடுவதைவிட வேற என்ன வேண்டும்..? சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Jul 15, 2021, 5:16 PM IST
Highlights

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஆடுவதைவிட வேறு மகிழ்ச்சியில்லை என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், ஜடேஜா, பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய வீரர்கள் அடங்கிய இந்திய மெயின் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளது. 

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருந்ததால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையில் புவனேஷ்வர் குமார், சூர்யகுமார் யாதவ், சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

இந்த வீரர்களில் பெரும்பாலானோர் ராகுல் டிராவிட் அண்டர் 19 இந்திய அணி மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தபோது அவர்கள் உருவாக்கிய வீரர்கள் தான் இந்த இலங்கை தொடரில் ஆடுகிறார்கள். 

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷுப்மன் கில், முகமது சிராஜ் உள்ளிட்ட பல சிறந்த இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தவர் ராகுல் டிராவிட். ராகுல் டிராவிட்டுடன் நெருங்கி பழகிய இந்த வீரர்கள் அனைவருமே ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை தொடரில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் மீண்டும் ஆடவுள்ள சஞ்சு சாம்சன் டிராவிட் குறித்து பேசியுள்ளார். டிராவிட் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், இந்தியா ஏ அணியில் ஆடிய அனைத்து வீரர்கள் மற்றும் ஜூனியர் வீரர்கள் என அனைவருமே ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆடவும், அவரிடமிருந்து கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் தேர்விற்கு நான் சென்றிருந்தேன். நான் ஆடியதை பார்த்த ராகுல் டிராவிட், எங்கள் அணிக்கு(ராஜஸ்தான் ராயல்ஸ்) நீ ஆட முடியுமா? என கேட்டார். என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் அதுதான். என்னால் அதை மறக்கவே முடியாது. அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்று பாருங்கள். அவரது லெவலுக்கு என்னிடம் வந்து ஆடமுடியுமா என கேட்டார். அவருடன் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என் பள்ளி விளையாட்டு விழாவில் தான் முதன் முதலில் ராகுல் டிராவிட்டை நான் பார்த்தேன்; அவருடன் பேசினேன். மிகவும் அமைதியான, அருமையான மனிதர். கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்திருந்தாலும், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் மற்றும் இனிமையானவர். அவரது பயிற்சியின் கீழ் ஆடுவதை விட மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. அவரை மாதிரியான லெஜண்ட்டை பயிற்சியாளராக பெற்றிருப்பதன்மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
 

click me!