கடைசி ஓவரில் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலை நிராயுதபாணியாக நிற்கவைத்த ஸ்டார்க்..! ஆஸி., வெற்றி

By karthikeyan VFirst Published Jul 15, 2021, 3:33 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 4வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் மேத்யூ வேட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 

அரைசதம் அடித்த ஃபின்ச் 53 ரன்னில் ஆட்டமிழக்க, 44 பந்தில் 75 ரன்கள் விளாசி மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, ஹென்ரிக்ஸ், அஷ்டான் டர்னர் ஆகியோர் சரியாக ஆடாமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்வரிசையில் இறங்கிய கிறிஸ்டியன் 14 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ஆஸி., அணி 189 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 190 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் லெண்டல் சிம்மன்ஸ் மற்றும் எவின் லூயிஸ் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்து கொடுத்தனர். லூயிஸ் 31 ரன்னில் ஆட்டமிழக்க, கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னிலும், ஃப்ளெட்சர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அபாரமாக ஆடி அரைசதம் அடித்த சிம்மன்ஸ் 48 பந்தில் 72 ரன்னுக்கு ஆட்டமிழக்க, நிகோலஸ் பூரன் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். ஃபேபியன் ஆலன் 29 ரன்கள் அடித்தார். ஆண்ட்ரே ரசல் களத்தில் இருக்க,  19 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 179 ரன்கள் அடித்திருந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே வெஸ்ட் இண்டீஸுக்கு தேவைப்பட்டது. அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் களத்தில் இருந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ரசிகர்களும் நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் கடைசி ஓவரை வீசிய ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க், ஆண்ட்ரே ரசலுக்கு சாமர்த்தியமாக பந்துவீசி முதல் பந்தில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தி ஆஸி., அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி பந்தில் ரசல் ஒரு சிக்ஸர் அடித்தார். இதையடுத்து 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!