நாம டென்சன் ஆகக்கூடாது; அவங்கள டென்சன் ஆக்கணும்..! “தல” வேற லெவல் கேப்டன்

By karthikeyan VFirst Published Jun 29, 2020, 5:55 PM IST
Highlights

2007ல் இளம் தோனியின் கேப்டன்சி மற்றும் திட்டமிடல் குறித்து இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் பகிர்ந்துள்ளார்.
 

2007 டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி புதிய அத்தியாயத்தில் காலெடுத்து வைத்த வரலாற்று சம்பவம் அது. 2007 ஒருநாள் உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. 

அந்த உலக கோப்பை தோல்வி, இந்திய அணிக்கு பெரும் அடியாக விழுந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலக, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். 

தோனியின் தலைமையில் ரோஹித் சர்மா, யூசுஃப் பதான், ராபின் உத்தப்பா, ஸ்ரீசாந்த், ஜோஹிந்தர் சர்மா என இளம் படையினர், 2007 டி20 உலக கோப்பையில் களம் கண்டனர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி என்ற மூன்று மாபெரும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த சீனியர் வீரர்கள் இல்லாமல், ஆடிய இளம் இந்திய அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

தோனி தலைமையிலான இளம் இந்திய அணி, அனுபவமான ஆஸ்திரேலியா, அதிரடி பாகிஸ்தான் ஆகிய அணிகளை எல்லாம் வீழ்த்தி டி20 உலக கோப்பையை வென்றது இளம் இந்திய அணி. அந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணி அடைந்த பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. அதன்பின்னர் 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார் தோனி. 

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு அளித்த பேட்டியில், 2007 டி20 உலக கோப்பை தொடரின்போது இந்திய அணியின் மேலாளராக இருந்த லால்சந்த் ராஜ்புத், அணியின் டிரெஸிங் ரூம் சூழல் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். 

அப்போது, அணியின் சூழல் குறித்து பேசிய லால்சந்த் ராஜ்புத், அந்த காலக்கட்டத்தில் டிரெஸிங் ரூமில் அணி சூழல் அருமையாக இருந்தது. வீரர்கள் அழுத்தத்தையும் நெருக்கடியையும் உணராத அளவிற்கு உற்சாகப்படுத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். நாம டென்சன் ஆகக்கூடாது; எதிரணிகளை டென்சனாக்க வேண்டும் என்று தோனி சொல்வார். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படக்கூடாது. நமது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியான அணி தான் அது என்று லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
 

click me!