இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன்.. ஆஸ்திரேலிய அணி மெகா ஸ்கோர்.. பாகிஸ்தானுக்கு மரண அடி

Published : Nov 23, 2019, 10:02 AM ISTUpdated : Nov 23, 2019, 10:03 AM IST
இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன்.. ஆஸ்திரேலிய அணி மெகா ஸ்கோர்.. பாகிஸ்தானுக்கு மரண அடி

சுருக்கம்

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய அணி பயணித்து கொண்டிருக்கிறது.   

பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்திருந்தது. 

ஆஷஸ் தொடரில் படுமோசமாக சொதப்பிய வார்னர், இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி அபாரமாக ஆடி சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 151 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் அரைசதம் அடித்து லபுஷேனும் களத்தில் நின்றார். 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வார்னர் 154 ரன்களில் நசீம் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித், வெறும் 4 ரன்களில் யாசிர் ஷாவின் சுழலில் வீழ்ந்தார். பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் வழக்கம்போல மிகச்சிறப்பாக ஆடிய லபுஷேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

மேத்யூ வேட் 60 ரன்களில் ஆட்டமிழக்க, லபுஷேனுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். சதத்திற்கு பின்னரும் பொறுப்புடனும் தெளிவாகவும் சிறப்பாக ஆடிய லபுஷேன் 150 ரன்களை கடந்தார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 24 ரன்களில் ஹாரிஸ் சொஹைலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்களை கடந்து ஆடிவருகிறது. சிறப்பாக ஆடிவரும் லபுஷேன், இரட்டை சதத்தை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறார். அவருடன் கேப்டன் டிம் பெய்ன் இணைந்து ஆடிவருகிறார். ஆஸ்திரேலிய அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. 650 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் பாகிஸ்தானைவிட 400 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும். அப்படி பார்த்தால் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸ் தோல்வி உறுதியாகிவிட்டது. 
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?