இந்திய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தில் சொற்ப ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.. இஷாந்த் சர்மா அபாரம்

By karthikeyan VFirst Published Nov 22, 2019, 5:12 PM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் இம்ருல் கைஸை 4 ரன்களில் வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அதன்பின்னர் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரும் உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேறினர். வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்ஃபிகுர் ரஹீமும் ஒரு ரன் கூட எடுக்காமல் ஷமியின் பந்தில் டக் அவுட்டானார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். 29 ரன்கள் அடித்திருந்த அவரை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவும் 6 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து லிட்டன் தாஸுடன் நயீம் ஹசன் ஜோடி சேர்ந்தார். 

ஷமி வீசிய பவுன்ஸர் ஒன்று லிட்டன் தாஸின் தலையை பதம்பார்த்தது. அதனால் அவருக்கு தலையில் வலி ஏற்பட்டது. ஹெல்மெட்டில் அந்த பவுன்ஸர் கடுமையாக தாக்கியதால், தலையில் அடிபட்டதால் அவரை பரிசோதிக்க வேண்டியிருந்தது. அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை வரை 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 73 ரன்கள் அடித்திருந்தது. 

தலையில் அடிபட்ட லிட்டன் தாஸ் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால், நயீமுடன் எபாடட் ஹுசைன் ஜோடி சேர்ந்தார். அவர் ஒரே ரன்னில் நடையை கட்ட, லிட்டன் தாஸுக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய மெஹிடி ஹசன், 8 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்தில் அவுட்டானார். நயீம் ஹசனையும் இஷாந்த் சர்மா வீழ்த்த, கடைசி வீரரான அபு ஜயித்தை ஷமி வீழ்த்த, வங்கதேச அணி, இரண்டாவது செசனிலேயே வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகிவிட்டது. வெறும் 106 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்திய அணியின் சார்பில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

click me!