சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் முதல் அணியாக கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் 208 ரன்கள் குவித்துள்ளது. பிலிப் சால்ட் தன் பங்கிற்கு 54 ரன்கள் எடுத்தார். பின்னர் 209 ரன்களை வெற்ற் இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.
இதில், மாயங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய மாயங்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவும் தன் பங்கிற்கு 32 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இடையில் ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 18 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சிக்சராக விளாசினார். ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், அங்கிருந்து அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி வெற்றியின் விளிம்பு வரை வந்தது. 19ஆவது ஓவரை கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் மட்டும் கிளாசென் 3 சிக்ஸர் மற்றும் அகமது ஒரு சிக்ஸர் விளாசவே அந்த ஓவரில் மட்டுமே ஹைதராபாத் அணி 26 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் மட்டுமே ஹைதராபாத் அணிக்கு 13 ரன்கள் தேவப்பட்டது. ஹர்ஷித் ராணா கடைசி ஓவர் வீசினார். அந்த ஓவரில் கிளாசென் முதல் 2 பந்தில் 6,1 ரன் எடுக்க 3ஆவது பந்தில் ஷாபாஸ் அகமது ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் மார்கோ ஜான்சென் ஒரு ரன் எடுத்துக் கொடுத்தார். 5ஆவது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து கிளாசென் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த கேப்டன் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.