தோனி ஓய்வு..? டுவிட்டரில் கொளுத்திப்போட்ட கோலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Sep 12, 2019, 12:01 PM IST
Highlights

இந்திய அணியின் விராட் கோலியின் அண்மை டுவீட் ஒன்று, பல யூகங்களுக்கு வழிவகுத்து கொடுத்துள்ளது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி, பேட்டிங்கிலும் கேப்டன்சியிலும் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலுமே அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து, மூன்று தொடர்களையும் வென்று நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் ஆடவுள்ளது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும் தென்னாப்பிரிக்க அணி, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதலில் டி20 போட்டிகளும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. 

இந்நிலையில், கோலி திடீரென பதிவிட்டிருக்கும் ஒரு டுவீட், தோனியின் ஓய்வு குறித்த சந்தேகத்தை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அந்த போட்டி தனது வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத போட்டி என்றும், அது ஸ்பெஷலான நைட் என்றும் கோலி பதிவிட்டுள்ளார். மேலும் ஃபிட்னெஸ் டெஸ்ட்டின் போது ஓடுவது மாதிரி, அந்த போட்டியில் தன்னை தோனி ஓடவிட்டதாகவும் கோலி பதிவிட்டுள்ளார். 

A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test 😄 🇮🇳 pic.twitter.com/pzkr5zn4pG

— Virat Kohli (@imVkohli)

2016 டி20 உலக கோப்பையில், அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய போட்டியில், கோலி அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ரோஹித் சர்மா, தவான், ரெய்னா ஆகியோர் சோபிக்காத நிலையில், விராட் கோலி தனி ஒரு வீரராக நின்று அபாரமாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அந்த போட்டியில் கடைசி ஓவரின் முதல் பந்தில் வின்னிங் ஷாட்டை தோனிதான் அடித்தார். 

அந்த போட்டியில் வென்றபின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துதான் கோலி இந்த டுவீட்டை செய்துள்ளார். தோனிக்கு தலைவணங்குவது போன்று அந்த புகைப்படம் அமைந்திருப்பதோடு, தோனிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. 

கோலி திடீரென அந்த புகைப்படத்தை பகிர்ந்து டுவீட் செய்திருப்பதால், தோனி ஓய்வு பெறப்போவதைத்தான் கோலி மறைமுகமாக உணர்த்துகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரசிகர்களும் இதே சந்தேகத்துடன் அந்த டுவீட்டை பார்த்துவருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் புறக்கணிக்கப்பட்ட தோனி, இனிமேல் இந்திய அணியில் ஆடுவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால் விக்கெட் கீப்பர்களை உருவாக்கி கொடுத்துவிட்டுத்தான் செல்வார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோலி திடீரென இப்படியொரு டுவீட்டை போட்டிருப்பது பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. 
 

click me!