இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்த இலங்கை! ராகுல் அரைசதத்தால் 2வது ODI-யில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Jan 12, 2023, 8:52 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுலின் பொறுப்பான அரைசதத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் ஆடுகிறார். கடந்த போட்டியின்போது சாஹலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. பதும் நிசாங்கா மற்றும் மதுஷங்காவிற்கு பதிலாக முறையே நுவானிது ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.

ரிக்கி பாண்டிங்கை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன்..! காரணத்துடன் புகழாரம் சூட்டிய கம்பீர்

இலங்கை அணி:

நுவானிது ஃபெர்னாண்டோ, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துனித் வெல்லாலகே, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 20 ரன்களுக்கு போல்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். அதன்பின்னர் நுவானிது ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர். குசால் மெண்டிஸ் 34 ரன்களுக்கு குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து நுவாநிது ஃபெர்னாண்டோ 50 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார்.

தனஞ்செயா டி சில்வாவை டக் அவுட்டாக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். இலங்கை மிடில் ஆர்டரின் பலமான சாரித் அசலங்கா(15) மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா (2) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 126 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் வனிந்து ஹசரங்கா(21), வெல்லாலகே(32), சாமிகா கருணரத்னே(17), கசுன் ரஜிதா (17) ஆகிய நால்வரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, அந்த அணி 215 ரன்கள் அடித்தது. ஹசரங்கா மற்றும் சாமிகா கருணரத்னே ஆகிய இருவரையும் உம்ரான் மாலிக் வீழ்த்த, வெல்லாலகேவை சிராஜ் வீழ்த்த 39.4 ஓவரில் 215 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது. 

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

216 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி எளிதாக இந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இலக்கும் எளிதானது என்பதாலும், கொல்கத்தா ஈடன் கார்டன் ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்தமான மைதானம் என்பதாலும் இந்த இலக்கை இந்திய அணி எளிதாக அடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரோஹித் சர்மா 17 ரன்களுக்கும் ஷுப்மன் கில் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் சதமடித்த விராட் கோலியும் 4 ரன்களுக்கு அவுட்டானார். ஷ்ரேயாஸ் ஐயரும் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர் கேஎல் ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து சிறப்பாக ஆடி, 5வது விக்கெட்டுக்கு 75 ரன்களை சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நீ அவசரப்படாம நின்னு ஆடி சதம் அடி.. மற்றதை நான் பார்த்துக்குறேன்னு சொன்னார் தோனி..! கம்பீர் நெகிழ்ச்சி

அதன்பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேல் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேஎல் ராகுல், 64 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 44வது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

இந்த  போட்டியில் எளிய இலக்கை இந்திய அணியை எளிதாக அடிக்கவிடவில்லை இலங்கை அணி. கேஎல் ராகுல் - ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப் மட்டும் அமையாவிட்டால், இந்திய அணி வெற்றி பெறுவது சந்தேகமாகியிருக்கும். இலங்கை அணி இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்தது. 

click me!